குஜராத் | பணிப்பெண்ணின் பேத்திக்கு வீட்டை எழுதிவைத்த முதியவர்.. உண்மையான அன்பால் உயிர்பெற்ற உயில்!
குஜராத்தைச் சேர்ந்த முதியவரின் வீடு, அவரது சமையல் பணிப்பெண்ணின் பேத்திக்கு வழங்கப்பட்டுள்ளது. மனைவியை இழந்தவரும், குழந்தைகள் இல்லாதவருமான குஸ்தாத் பரோஜி என்ற பொறியாளர் 2014இல் 89ஆவது வயதில் மறைந்தார். இறப்பதற்கு முன்பு, தன் மீது மிகுந்த அன்பு செலுத்திய அமிஷா மக்வானாவுக்கு அகமதாபாத்தில் உள்ள தனது 1,431 சதுர அடி வீட்டை உயில் எழுதிவைத்தார். மக்வானாவின் பாட்டி, பொறியாளர் குடும்பத்திற்கு ஒரு பராமரிப்பாளராக தனது சமையல் சேவைகளைச் செய்து வந்தார். மிகச் சிறிய வயதிலிருந்தே, அமிஷா தனது பாட்டியுடன் பொறியாளர் குடும்பத்தின் வீட்டிற்குச் செல்வார். பொறியாளர், அமிஷாவுடன் ஒரு பிணைப்பை வளர்த்துக் கொண்டார். மேலும் அவருடைய கல்விக்கும் பொறுப்பேற்றார். இதற்கிடையே, அமிஷாவுக்கு 13 வயது இருந்தபோது இந்த வீடு அவரது பெயரில் உயில் எழுதப்பட்டது.
தவிர, அதற்கு சாட்சியாய் இரண்டு பாதுகாலர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், அமிஷாவுக்கு 18 வயது நிறைவடையும்வரை குஸ்தாதின் உறவினரின் பாதுகாப்பில் அவரது வீடு இருந்துவந்தது. இப்போது குஸ்தாதின் உடன்பிறப்புகளும் உறவினர்களும் அவரது உயிலுக்கு உயிர்கொடுத்துள்ளனர். குடும்பத்தினர் ஒத்துழைப்பின் மூலம் குஸ்தாதின் உயில் அகமதாபாத் நீதிமன்றத்தால் செல்லுபடியாக்கப்பட்டது. தனது 13 வயதுவரை, குஸ்தாத் தனது தாயாகவும் தந்தையாகவும் இருந்து தன்னைப் பார்த்துக்கொண்டதாக அமிஷா உருக்கத்துடன் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் மனிதவளத் துறையில் பணிபுரியும் மக்வானா டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில், "நான் அவரை தாய் என்று அழைப்பேன். எங்களுக்குள் ஒரு சிறப்புப் பிணைப்பு இருந்தது. அவர் என்னை கவனித்துக்கொள்ள விரும்பினார். அவர் என் அம்மா, அப்பாவைப் போல இருந்தார். எனக்கு 13 வயது வரை, அவர் எனக்கு ஒரு பாதுகாப்பு கேடயமாக இருந்தார். அவர் என்னை தத்தெடுக்க விரும்பினார். ஆனால் என் ஆர்வத்தை மட்டுமே கருத்தில் கொண்டு அவ்வாறு செய்யவில்லை. அவர் ஒரு பார்சி என்பதால், எனது நம்பிக்கையையோ அல்லது அடையாளத்தையோ மாற்ற விரும்பவில்லை. தத்தெடுப்பு எனது உயிரியல் பெற்றோரிடமிருந்து என்னைத் தூர விலக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். இரு குடும்பங்களிடமிருந்தும் எனக்கு பாசம் கிடைக்க வேண்டும் என்று அவர் எப்போதும் விரும்பினார்" என அதில் தெரிவித்துள்ளார்.
சொத்து தகராறுகளால் ரத்த சொந்தங்கள் ஜென்மப் பகையாளிகளாக மாறும் கதைகள் பலவற்றைக் கேட்டிருப்போம். இந்தப் பின்னணியில் குஸ்தாத் குடும்பத்தினரின் செயல் நெகிழ்ச்சி அளிக்கிறது.