சிகரெட் முதலிய பொருட்களுக்கு 35% வரி உயர்வு.. GST கவுன்சில் கொண்டுவரும் முக்கிய மாற்றம்? முழு விவரம்
2024-ம் ஆண்டின் கடைசி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ராஜஸ்தானில் டிசம்பர் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 148 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து ஆலோசனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புகையிலை பொருட்கள், காற்றூட்டப்பட்ட பானங்கள் மீது 35 சதவீத சிறப்பு வரியை கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. பொதுவாக தற்போது நடைமுறையில் இருக்கும் 5%, 12%, 18% மற்றும் 28% என்ற நான்கு அடுக்கு வரி ஸ்லாப் எப்போதும் போல தொடரும். அதோடு 35 சதவிகிதம் சிறப்பு வரி என்ற புதிய வரி அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் 20 லிட்டர் மற்றும் அதற்கு அதிகமான பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க முன்மொழியப்பட்டது.
10,000 ரூபாய்க்கும் குறைவான சைக்கிள்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க கவுன்சிலில் முன்மொழியவும் முடிவு செய்யப்பட்டது. ரூ.15,000 -க்கு மேல் உள்ள ஷூக்கள் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தவும், 25,000 ரூபாய்க்கு மேல் உள்ள கைக்கடிகாரங்கள் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், வரும் டிசம்பரில் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மருத்துவக் காப்பீட்டுக்காக மூத்த குடிமக்கள் செலுத்தும் பிரீமியம் மற்றும் ஆயுள் காப்பீட்டிற்காக அனைவரும் செலுத்தும் பிரீமியம் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. மற்ற குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டுத் தொகைக்கு விலக்கும், ரூ.5 லட்சத்துக்கு மேல் மருத்துவக் காப்பீட்டுத் தொகைக்கு தற்போதுள்ள 18 சதவீதமும் விலக்கு அளிக்கப்படும் என தெரிகிறது.