புதிய PAN கார்டுகளை வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல்.. PAN 2.0 திட்டம் என்றால் என்ன? முழு விவரம்
PAN என்பது வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறையால் வழங்கப்படும் பிரத்தியேகமான 10 இலக்க எண் ஆகும். வங்கி கணக்கு தொடங்குவதில் இருந்து தொடங்கி, கடன் வாங்குவது, குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணத்தை எடுப்பது, பண பரிவர்த்தனை, வரி ஏய்ப்புகளை தடுப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளில் PAN கார்டு இன்றியமையாத ஆவணமாக இருந்துவருகிறது.
PAN 2.0 என்றால் என்ன?
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அதிநவீன வசதி கொண்ட புதிய பான் அட்டைகளை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.1,435 கோடி ஒதுக்குவதாகவும் கூறியுள்ளது. தற்போது நம்மிடம் நடைமுறையில் உள்ள பான் அட்டையில் 10 இலக்க அடையாள எண் மற்றும் குறியீடு இருக்கும். புதிதாக அறிமுகப்படுத்தப்போகும் பான் அட்டையில் QR Code இடம்பெற்று இருக்கும்.
இதன் மூலம் PAN கார்டு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். PAN கார்டு சேவைகள் வெளிப்படைத்தன்மையாக இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.
PAN 2.0-வின் சிறப்பம்சங்கள்
ஒருங்கிணைந்த போர்டல் வசதியின் மூலம் PAN தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே ஆன்லைன் தளம் கிடைக்கும்.
QR Code இடம்பெற்று இருப்பதால் cybersecurity மேம்படுத்தப்பட்டு இருக்கும்.
வரி செலுத்துவோருக்கு பான் அட்டைகளில் இருக்கும் குறைகளை விரைவில் சரிசெய்ய வழிவகுக்கும்.
ஒன்றிற்கும் அதிகமான PAN-களை விதிகளை மீறி வைத்திருப்பவர்கள், வருமான வரிச் சட்டம், 1961-ன் படி கூடுதல் பான் அட்டைகளை செயலிழக்கச் செய்ய வேண்டும்.
நடைமுறையில் உள்ள PAN card செல்லாதா?
PAN 2.0 திட்டத்தின் கீழ் புதிய PAN அட்டைகள் வந்தாலும், நடைமுறையில் உள்ள PAN அட்டைகள் செல்லும். QR குறியீடுகள் இல்லாத பழைய PAN கார்டுகளை வைத்திருப்பவர்கள் புதிய ஒன்றிற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் இது தற்போது கட்டாயமாக்கப்படவில்லை. எனினும் வருங்காலத்தில் பான் செயல்பாடுகளை எளிதாக்க புதிய அட்டைகளை பெறுவது சிறந்தது என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
PAN 2.0 திட்டத்தின் கீழ் QR குறியீடு அம்சத்துடன் கூடிய பான் கார்டுகள் வரி செலுத்துவோருக்கு இலவசமாக வழங்கப்படும். இதற்கு எந்த கட்டணமும் இல்லை என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ் தெரிவித்தார்.
மேலும்,ஏற்கனவே PAN வைத்திருப்பவர்கள் மின்னஞ்சல், மொபைல் எண், முகவரி, பெயரில் மாற்றம், பிறந்த தேதி போன்ற விவரங்களில் ஏதேனும் திருத்தம் அல்லது புதுப்பிக்க வேண்டுமெனில் , PAN 2.0 திட்டம் தொடங்கிய பிறகு அவர்கள் அதை இலவசமாகச் செய்யலாம்.
நவம்பர் 26ல் மத்திய அமைச்சரவை PAN 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த நிலையில், இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.