ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை பாஜக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. 1967 ஆம் ஆண்டுவரை இந்த நடைமுறை தொடர்ந்தது என்றாலும் பல்வேறு காரணங்களால் அது கைவிடப்பட்டது. அதை மீண்டும் செயல்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் எதுவும் கைகூடவில்லை. தற்போது மீண்டும் பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை உயர்த்திப் பிடிக்கிறது.
இதற்கென முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றன.
இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானால் குறைந்தபட்சம் 5 சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என கூறப்படுகிறது. அதன்படி நாடாளுமன்ற அவைகளின் பதவிக்காலம் (விதி83), மக்களவையை கலைத்தல் (விதி 85), மாநில பேரவையின் பதவிக்காலம் (விதி 172), பேரவையை கலைத்தல் (விதி 174), மாநிலங்களில் குடியரசுத் தலைவர் (ஆட்சி விதி 356) போன்ற விதிகளில் திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த முயற்சிகள், கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முன்னாள் தேர்தல் கமிஷ்னர் கிருணமூர்த்தியை தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது, “ஒரே நாடு ஒரே தேர்தலில் சில நன்மைகளும் உள்ளன. சில சிக்கல்களும் உள்ளன. பொருளாதாரத்தின் அடிப்படையிலும் நிர்வாகத்தின் அடிப்படையிலும் பார்த்தால் நிச்சயம் நல்லது. ஏனெனில், மூன்று மாதத்திற்கு ஒருமுறை தேர்தலை வைத்துக்கொண்டு, தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கும் அதிகமான நிர்வாக சிக்கல்கள் உள்ளன. இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமெனில் தேர்தல் நடக்கும் நாட்களை குறைத்தல் நல்லதுதான். எனவே நிர்வாக ரீதியாக ஒரே நாடு ஒரே தேர்தல் நல்லது.
அதைத்தவிர இதில் அரசியல் அதிகமாக உள்ளது. 1967 வரை ஒரே தேர்தல் ஒரே நாளில் நாடு முழுவதும் நடந்துள்ளது. நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களின் மூலமாகவோ அல்லது அரசோ அமைச்சரவையைக் கலைக்கலாம். நாம் நாடாளுமன்றத்தில் பிரிட்டிஷ் நடைமுறையை தொடர்கிறோம். தேர்ந்தெடுக்கப்படும் அரசு 5 வருடம் இருக்கும் என் சொல்லமுடியாது. ஆனால் அமெரிக்காவில் அந்த நடைமுறை கிடையாது.
தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் 4 வருடம் இருக்க வேண்டும் என்றால் அவர் இருந்து தான் ஆக வேண்டும். ஆனால் இங்கு அப்படியில்லை. எனவே இங்கு இது சாத்தியப்பட வேண்டுமென்றால், அம்மாதிரியான மாற்றத்தை இங்கும் கொண்டு வரவேண்டியிருக்கும். அதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு பெற்றும் 50% மாநிலங்கள் ஒப்புதல் தெரிவிக்கவேண்டிய சூழல் வரும். பின்பே அவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும். இதையெல்லாம் உடனே கொண்டு வரமுடியுமா என்றால் இதில் நிறைய சிக்கல்கள் உள்ளன.
இச்சட்டம் தேவை என்று சொல்வதை விட இதைக் கொண்டுவருவது நல்லது என்றே சொல்ல வேண்டும். திடீரென அரசு கலைக்கப்பட்டால் என்ற வாதத்துக்கு, அங்கு ஜனாதிபதி அரசு கொண்டு வரலாம் என்பதே பதில். அரசியல்வாதிகள் குறுகிய கால நலனைத்தான் பார்ப்பார்கள். அவர்களை நான் குறை சொல்லவில்லை, அவர்களது கட்சிக்கு எது நல்லதோ அதைத்தான் ஆதரிப்பார்கள்.
ஒரே நேரத்தில் தேர்தல் வந்தால் முக்கியத்துவம் அனைத்தும் மக்களவைத் தேர்தலை ஒட்டியே இருக்கும் என சொல்கிறார்கள். வாக்காளர்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல. வாக்காளர்களுக்கு வித்தியாசம் தெரியும்” என்றார்.