மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு | பாஜக முன்னாள் எம்பி பிரக்யா தாகூர் உட்பட 7 பேரும் விடுவிப்பு
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கும்.. விசாரணையும்
மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் மாலேகானில் உள்ள ஒரு மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் கட்டப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்தது. கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற இந்த விபத்தில், 6 பேர் கொல்லப்பட்டனர். 101 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஆரம்பத்தில் மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர், ஆனால் முன்னாள் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர், முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித், ரமேஷ் உபாத்யாய், சமீர் குல்கர்னி, அஜய் ரஹிர்கர், சுதாகர் திவேதி மற்றும் சுதாகர் சதுர்வேதி உள்ளிட்ட ஏழு பேர் மட்டும் விசாரணையை எதிர்கொண்டனர். மற்ற ஏழு பேர் விடுவிக்கப்பட்டனர்.
இதுதொடர்பான மேலதிக விசாரணையை மேற்கொள்ள NIA-வுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, NIA தொடர்ந்து விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், 17 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணைக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
NIA சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
மும்பையில் உள்ள NIA சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பில், வழக்கு விசாரணையில் சந்தேகத்திற்கு இடமின்றி வழக்கை நிறுவ அரசு தரப்பு தவறிவிட்டதாகக் கூறிய நீதிமன்றம், 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுவித்தது. மேலும், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மகாராஷ்டிரா அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக, இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிராக வலதுசாரி அமைப்பினர் சிலரால் இந்த குண்டுவெடிப்பு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாக அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பு குறித்து முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்கூர், ”நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருப்பது தனக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு 'பகவாவிற்கும்' கிடைத்த வெற்றி” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “விசாரணைக்கு அழைக்கப்படுபவர்களுக்கு ஒரு அடிப்படை இருக்க வேண்டும் என்று நான் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறேன். விசாரணைக்கு அவர்களால் அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டேன். இது என் முழு வாழ்க்கையையும் நாசமாக்கியது. நான் ஒரு தவ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனாலும் நான் குற்றம்சாட்டப்பட்டேன். யாரும் எங்களுக்காக ஆதரவாக நிற்கவில்லை. அவர்கள் ஒரு சதி மூலம் பகவாவை அவதூறு செய்தனர். இன்று, பகவா வெற்றி பெற்றுள்ளார். இந்துத்துவா வெற்றி பெற்றுள்ளது. மேலும் குற்றவாளிகளை கடவுள் தண்டிப்பார்” என அவர் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள்
* கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த இந்த விசாரணை இறுதியாக 2018இல் தொடங்கியது.
* இதுதொடர்பான் 1,087 நீதிமன்ற விசாரணைகளில், பிரக்யா சிங் தாக்கூர் மட்டும் 34 முறை ஆஜராகியுள்ளார்.
* மொத்தத்தில், இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கையாண்டுள்ளனர்.
* ஆரம்பத்தில், இந்த வழக்கு ஒய்.டி. ஷிண்டே முன் விசாரணைக்கு வந்தது. பின்னர், எஸ்.டி.டெகலே பொறுப்பேற்றார். அவர் மாற்றப்பட்டவுடன், வி.எஸ். படால்கர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் பி.ஆர். சித்ரே நியமிக்கப்பட்டார், இறுதியாக ஏ.கே. லஹோட்டி விசாரணையைத் தொடர்ந்தார்.