#DelhiChalo தீவிரமான போராட்டம்.. ட்ரோன் மூலம் கண்காணிக்கும் அரசு; பட்டம்விட்டு தடுக்கும் விவசாயிகள்!

விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம், இரண்டாம் நாளான இன்றும் தீவிரமடைந்துள்ளது.
விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்டெல்லி

பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டத்தை ஆரம்பித்த விவசாயிகள்!

’விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீண்டுமொரு தொடர் போராட்டத்தை டெல்லியில் நடத்துவதற்கு பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் திட்டமிட்டனர். ’டெல்லி சலோ’ (டெல்லி நோக்கிச் செல்லுங்கள் - இது சுதந்திர போராட்டத்தின் போது சுபாஷ் சந்திர போஸின் புகழ்பெற்ற முழக்கம்) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் போராட்டத்திற்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. முன்னதாக இந்தப் போராட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயச் சங்கத் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் சுமுக முடிவுகள் எதுவும் எட்டப்படாததை அடுத்து, திட்டமிட்டபடி விவசாயிகள் நேற்று போராட்டத்தைத் தொடங்கினர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏராளமான டிராக்டர்களில் ஷம்பு எல்லை (பஞ்சாப் -ஹரியானா எல்லை) வழியாகச் செல்ல முயன்ற விவசாயிகள் போலீசாரால் தடுக்கப்பட்டனர். அவர்கள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் ரப்பர் குண்டுகளையும் வீசிக் கலைத்தனர். அவ்வப்போது டிரோன் மூலமும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். ஆனால் விவசாயிகள் அதிலிருந்து பின்வாங்காமல் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை அகற்றி உள்ளே நுழைவதற்கு முயன்றவண்ணம் இருந்தனர்.

சில விவசாயிகள், பக்கத்து வயலில் இறங்கிச் செல்ல முயன்றபோது, அவர்கள்மீதும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் இரவிலும் இந்தப் போராட்டம் தொடர்ந்தது.

விவசாயிகள் போராட்டம்
டெல்லி: உள்ளே நுழையும் விவசாயிகள்.. தடுத்து நிறுத்தும் போலீசார்.. உளவுத் துறை கொடுத்த சீக்ரெட்!

2வது நாள் மேலும் தீவிரமான போராட்டம்: ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு!

இதனிடையே இரண்டாவது நாளான இன்றும், டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இன்றும் ஷம்புவில் நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் அணிவகுத்து நின்றபடி உள்ளனர். விவசாயிகள் தடுப்புகளை நெருங்காமல் தடுக்க ஹரியானா போலீஸார் இன்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர். இதில் தற்போது வரை 60 பேர் காயமடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலையில் தடையை உடைத்து டெல்லியில் முகாமிட்டு போராடியே தீருவது என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

‘இந்த முறையும் நீண்டபயணத்துக்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும், எவ்வளவு காலமானாலும் தங்களின் கோரிக்கை நிறைவேறாமல் திரும்பப் போவதில்லை என்றும், டெல்லி செல்லும் அளவுக்கு டீசலும், ஆறு மாதங்களுக்கு தேவையான உணவுபொருள்களும் கையிருப்பில் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பஞ்சாப் - ஹரியானா எல்லை ஷம்பு பகுதியில் முகாமிட்டுள்ள விவசாயிகளை ட்ரோன்கள் மூலம் அம்மாநில போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஆனால் போராடும் விவசாயிகளோ ட்ரோன்களை தடுக்கும் வகையில் சரமாரியாக பட்டங்களைப் பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தற்போதும் பஞ்சாப்- ஹரியானா எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

விவசாயிகள் போராட்டம்
”டெல்லி சலோ” தலைநகரை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; டிராக்டர்களை பஞ்சராக்க இரும்பு ஆணி தடுப்புகள்!

விவசாயிகளுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இரண்டாம் கட்ட ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸின் மூத்த தலைவரும் வயநாடு தொகுதியின் எம்பியுமான ராகுல் காந்தி, அதை தற்சமயத்திற்கு கைவிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதுபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் விவசாயிகளுக்கு ஆதரவாக சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, மக்களவை தேர்தலுக்காக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘தலைநகர் டெல்லியில் ஏன் போர்ச்சூழல் போன்ற பதற்றம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்? ஒன்றிய பாஜக அரசு, தன் சொந்த நாட்டில் வாழும் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க, போர்க்களத்தைவிடக் கொடுமையான சூழலை உருவாக்கியிருக்கிறது. மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களைக் கொண்டுவந்து இந்திய உழவர்களின் வயிற்றிலடித்த ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து ஏறத்தாழ ஓராண்டுக்காலம் இடைவிடாது போராடினார்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் அவர்கள் பக்கம் உறுதியாக நின்றது. நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பியது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியது. அசைந்து கொடுக்க மறுத்த ஒன்றிய பாஜக அரசு உழவர்களை ஒடுக்க நினைத்தது. அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்தது.

அப்போதும் உரிமைப் போராட்டத்தை ஒடுக்கமுடியாத காரணத்தால், 3 வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. ஆனால், உழவர்களின் வாழ்வு செழிப்பதற்கான திட்டங்களை அறிவிக்கவில்லை. அவர்கள்மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெறவில்லை. தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, தலைநகரில் போராட்டம் நடத்தவரும் உழவர்களுக்கு எதிராகத்தான் ஆயுதம் ஏந்திய காவலர்களும், முள்-ஆணி படுக்கைகளைப் பாதையில் விரித்துப் போட்டிருக்கும் கொடூரமும் நிகழ்ந்துள்ளது. இதில் யார் தீவிரவாதிகள்… உழவர்களா? அரசாங்கமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com