டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்ட்விட்டர்

டெல்லி: உள்ளே நுழையும் விவசாயிகள்.. தடுத்து நிறுத்தும் போலீசார்.. உளவுத் துறை கொடுத்த சீக்ரெட்!

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகளைத் தடுக்கும் வகையில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி தடுத்து வருகின்றனர்.

’டெல்லி சலோ’: இன்று தொடங்கிய விவசாயிகள் போராட்டம்!

’விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீண்டுமொரு தொடர் போராட்டத்தை டெல்லியில் நடத்துவதற்கு பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் திட்டமிட்டனர். ’டெல்லி சலோ’ (டெல்லி நோக்கிச் செல்லுங்கள் - இது சுதந்திர போராட்டத்தின் போது சுபாஷ் சந்திர போஸின் புகழ்பெற்ற முழக்கம்) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் போராட்டத்திற்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து, இன்று (பிப்.13) இந்தப் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகளின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கிப் படையெடுத்தனர்.

பாதுகாப்பில் பலப்படுத்தப்பட்ட எல்லைச் சாலைகள்

அதேநேரத்தில், தேர்தல் சமயத்தில் இப்போராட்டத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அமைச்சர்கள் சிலர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மறுபுறம், இப்போராட்டத்தை முறியடிக்கும் வகையில் மத்திய பாஜக அரசும் தீவிரம்காட்டி வருகிறது. இதற்காக டெல்லி எல்லையையொட்டிய மாவட்டங்களான அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத் மற்றும் ஹிசாரில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லைகளின் முக்கிய சாலைகளில் தடுப்பு வேலிகளும், வாகனங்கள் நகருக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், எல்லைகளில் கான்கிரீட் தடுப்புகளும், இரும்பு ஆணிகளால் செய்யப்பட்ட வேகத் தடைகளும் ஆங்காங்கே பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, டயர்கள் பஞ்சர் ஆகிவிடும் வகையில் சாலைகளில் ஆணித் தடுப்புகள் அமைக்கப்பட்டன. தவிர, அப்பகுதிகளில் டெல்லி காவல் துறையினருடன், மத்தியப் பாதுகாப்புப் படை வீரர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆணித் தடுப்புகள்  குறித்த கருத்து பகிர்ந்த ராகுல்

முன்னதாக, சாலைகளில் ஆணித் தடுப்புகள் பற்றிய வீடியோக்கள் வைரலான நிலையில் அதைப் பகிர்ந்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி, ’விவசாயிகளின் பாதையில் ஆணி அடிப்பவர்கள் நம்பிக்கைக்கு தகுதியற்றவர்கள், அவர்களை டெல்லியில் இருந்து பிடுங்கி எறிந்துவிடுங்கள். விவசாயிகளுக்கு நீதியையும் லாபத்தையும் காங்கிரஸ் வழங்கும்’ எனப் பதிவிட்டிருந்ததுடன், ’பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளை மட்டுமே ஏமாற்றியுள்ளார்’ எனவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அமைச்சர்கள் - விவசாயிகள் பேச்சுவார்த்தை தோல்வி

இந்த நிலையில், நேற்று இரவு நடைபெற்ற விவசாயச் சங்கத் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவுகள் எதுவும் எட்டப்படாததை அடுத்து, திட்டமிட்டபடி டெல்லி சலோ போராட்டத்தை இன்று விவசாயிகள் தொடங்கினர். ஷம்பு பார்டர் (அம்பாலா), கானோரி (ஜிந்த்), மற்றும் டப்வாலி (சிர்சா) இடங்களில் இருந்து டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இன்று தடுப்புகளை மீறி விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைய முயன்றநிலையில் அவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனர். இதில் 4 பேர் காயமடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீச்சு: விவசாயிகள் காயம்!

மேலும், காஜிபூர் எல்லையை கடக்க முயன்றதாக கூறி மூன்று விவசாயிகளை காசியாபாத் போலீசார் கைதுசெய்தனர். அதேபோல், ஹரியானா-பஞ்சாப் எல்லைப் பகுதியான ஷம்புவை கடக்கும் முயற்சியில் போராட்ட விவசாயிகள் தங்கள் டிராக்டர்கள் மூலம் சிமெண்ட் தடுப்புகளை இடித்து அகற்றினர். அவர்களை கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகளை போலீசார் வீசினர். இதனால், தலைநகர் ஷம்பு எல்லைப் பகுதியில் பதற்றம் தொடர்ந்துள்ளது. மேலும், ஹரியானா எல்லையை நோக்கிச் செல்ல முயன்ற கும்பல் மீது போலீசார் தடியடி நடத்தியதால், ஹரியானா எல்லையில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

விவசாயிகள் - போலீசார் இடையேயான மோதலால் டெல்லி எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

’இன்னும் அதிக பேர் வருவோம்’ - விவசாயிகள் சங்கம்

விவசாயிகளின் டில்லி சலோ அணிவகுப்பு குறித்து பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பந்தேர், "டிராக்டர்கள், தள்ளுவண்டிகள் மற்றும் இன்னும் அதிகமான மக்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம், விரைவில் ஷம்பு எல்லையை அடையவுள்ளோம். அவர்கள் இங்கு வந்ததும் செயல் திட்டம் தொடங்கும்’ எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து விவசாயி தலைவர் ராகேஷ் டிகாயிட், "இந்தப் பேரணிக்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது, ஆனால் அநியாயம் ஏற்பட்டால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அவர்களுடன் இருக்கிறார்கள். டெல்லியும் வெகுதொலைவில் இல்லை. விவசாயிகளும் தொலைவில் இல்லை. அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வருகிறார்கள். அரசாங்கம் அவர்களுக்கு செவிசாய்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை கொடுத்த சீக்ரெட் நியூஸ்!

அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியும், விவசாயிகளுக்கு மத்திய அரசு அநீதி இழைப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ’விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதங்களை மோடி அரசு நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்' என்றார்.

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்து, இந்தப் போராட்டத்தை 6 மாதங்கள் நடத்த இருப்பதாகவும், அதற்கு ஏதுவாக 2,000 டிராக்டர்களில் உணவு, உடை உள்ளிட்ட பொருட்களுடன் வந்து இருப்பதாகவும், வாகனங்களையே விவசாயிகள் தங்குமிடங்கள்போல மாற்றி உள்ளதாகவும் உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் சிறு குழுக்களாகப் பிரிந்து போராட்டம் நடத்த இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com