”டெல்லி சலோ” தலைநகரை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; டிராக்டர்களை பஞ்சராக்க இரும்பு ஆணி தடுப்புகள்!

டெல்லியில் விவசாயிகளின் வாகனங்களைத் தடுக்கும்வண்ணம், டயர்கள் பஞ்சர் ஆகிவிடும் வகையில் சாலைகளில் ஆணிகள் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்ட்விட்டர்

’டெல்லி நோக்கிச் செல்லுங்கள்’ - விவசாயிகள் போராட்டம்

’விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீண்டுமொரு தொடர் போராட்டத்தை டெல்லியில் நடத்துவதற்கு பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு, ’டெல்லி சலோ’ (டெல்லி நோக்கிச் செல்லுங்கள் - இது சுதந்திர போராட்டத்தின் போது சுபாஷ் சந்திர போஸின் புகழ்பெற்ற முழக்கம்) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் போராட்டத்திற்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து, நாளை பிப்ரவரி 13இல் இந்த போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகளின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கிப் படையெடுத்தவண்ணம் உள்ளனர். அதேநேரத்தில், தேர்தல் சமயத்தில் இப்போராட்டத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அமைச்சர்கள் சிலர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கடந்த விவசாயிகள் போராட்டத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறவும், போலி விதை விற்பனை செய்வோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

டிராக்டர்களைப் பஞ்சராக்கும் வகையில் ஆணி மூலம் அமைக்கப்பட்டிருக்கும் தடைகள்

இதனிடையே, பஞ்சாப் (2000 டிராக்டர்கள்), உத்தரப்பிரதேசம் (500) ராஜஸ்தான் (200) உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 2,700 டிராக்டர்களில் சென்று டெல்லி எல்லைகளை முற்றுகையிட முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதை முறியடிக்கும் வகையில் மத்திய பாஜக அரசும் தீவிரம்காட்டி வருகிறது. இதற்காக டெல்லி எல்லையையொட்டிய மாவட்டங்களான அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத் மற்றும் ஹிசாரில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், எல்லைகளின் முக்கிய சாலைகளில் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் நகருக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், எல்லைகளில் கான்கிரீட் தடுப்புகளும், இரும்பு ஆணிகளால் செய்யப்பட்ட வேகத் தடைகளும் ஆங்காங்கே பலப்படுத்தப்பட்டுள்ளன. டயர்கள் பஞ்சர் ஆகிவிடும் வகையில் சாலைகளில் ஆணிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

டெல்லி எல்லைகளில் 144 தடை

தொடர்ந்து, டெல்லி காவல் துறையினரும் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக,டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லைகளில் கூட்டங்கள் கூடுவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா பிறப்பித்த உத்தரவில், ’எந்தவிதமான பேரணி அல்லது ஊர்வலம் மற்றும் சாலைகள் மற்றும் பாதைகளைத் தடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் மத்தியப் பாதுகாப்புப் படை வீரர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவு

போராட்டம் தொடர்பாக, ஆம் ஆத்மியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய், ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

’விவசாயிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எல்லா உரிமைகளும் காரணங்களும் உள்ளன. இந்தப் போராட்டத்தில் அவர்களுடன் நாங்களும் துணை நிற்போம்’ என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

அதுபோல் விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயிகள் வைக்கும் 10 கோரிக்கைகள் என்ன?

* விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும்

* 2020-21 விவசாயிகளின் போராட்டத்தின்போது அவர்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெற வேண்டும்.

* லகீம்பூர் கேரியில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்

* மத்திய அரசு கொண்டுவந்த மின்சார சட்டத் திருத்த மசோதா 2023 ரத்து செய்யப்பட வேண்டும்.

* C2க்கு மேல் 50 சதவீத MSPயை பரிந்துரைக்கும் சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்த வேண்டும்.

* நாடு முழுவதும் உள்ள விவசாயச் சங்க கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

* உலக வர்த்தக அமைப்பில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும்.

* விவசாயப் பொருட்களின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.

* இறக்குமதி வரியை உயர்த்தி இந்திய விவசாயிகளுக்குப் பலன் அளிப்பதாக வாக்குறுதி அளித்தல் வேண்டும்.

* 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.

2020இல் விவசாயிகள் ஓர் ஆண்டு நடத்திய போராட்டம்

முன்னதாக, வேளாண் துறையில் சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதற்காகவும் மத்திய அரசு ‘அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம்’, ’வேளாண் விளைபொருள் வா்த்தக ஊக்குவிப்புச் சட்டம்’, ’விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம்-வேளாண் சேவைகள் சட்டம்’ ஆகிய 3 சட்டங்களை நிறைவேற்றியது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், விவசாயச் சங்கங்களும் போராட்டத்தில் குதித்தன. இந்த சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைப் பகுதிகளில் கடந்த 2020இல் ஒன்றுகூடிய விவசாயிகள், சுமாா் ஓராண்டாகப் போராடினா். 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் டெல்லியில் ஒன்றுகூடிய விவசாயிகள், டெல்லி எல்லைகளில் டிராக்டர்களைக் குடிசைகளாக மாற்றித் தெருவில் விறகு அடுப்புகளை வைத்து தாங்களே சமைத்து உண்டு போராட்டம் நடத்தினர். தவிர, வெங்காய விளைச்சலையும் ஏற்படுத்தினர். இந்த வீடியோக்கள் எல்லாம் அந்த சமயத்தில் இணையத்தில் வைரலாகின. அதேநேரத்தில் இந்தப் போராட்டத்தின்போது எண்ணற்ற உயிர்களும் பலியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாய அமைப்புகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவாா்த்தைகளிலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பின்னர், உச்சநீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடா்ந்து, வேளாண் சட்டங்களின் அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் எனக்கோரி விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தின. இறுதியில் விவசாயிகளின் போராட்டத்தை அடுத்து மத்திய அரசு அந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதில் அரசியல் காரணம்

2022ஆம் ஆண்டில் நடைபெற இருந்த (தற்போது தேர்தல் முடிந்துவிட்டது) பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகான்ட், மணிப்பூா், கோவா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல்களைக் கருத்தில்கொண்டே இந்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதாக அரசியலாளர்கள் விமர்சனம் செய்திருந்தனர். அதற்குக் காரணம், இந்தப் போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகளே அதிக எண்ணிக்கையில் பங்கேற்றிருந்தனர். குறிப்பாக சீக்கிய, ஜாட் சமூகத்தைச் சோ்ந்த விவசாயிகள் மத்தியில் புதிய வேளாண் சட்டங்கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதால், பஞ்சாபிலும் மேற்கு உத்தரப்பிரதேசத்திலும் பாஜகவுக்கான செல்வாக்கு சரிய வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில்கொண்டே 3 புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றதாகக் காரணம் சொல்லப்பட்டது.

திரும்பப் பெற்ற நாளன்றே போராட்ட அறிவிப்பை வெளியிட்ட விவசாயச் சங்கங்கள்!

2020ஆம் ஆண்டு, ஜூன் 5ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட வேளாண் அவசரச் சட்டங்களுக்கு அதே ஆண்டு செப்.17இல், மக்களவை ஒப்புதல் வழங்கியது. அடுத்து, செப்.20இல் வேளாண் சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து போராட்டம் விவசாயிகளிடம் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், 2021, நவ.19 அந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஆயினும், அன்றே ‘குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிசெய்து சட்டம் இயற்றக் கோரும் போராட்டம் தொடரும்’ என விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன. அதைத்தான் தற்போது முன்னெடுத்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com