பல பேரின் உயிரைப் பறித்த மேகவெடிப்பு | “இனி இதுபோல் அடிக்கடி நடக்கும்” - எச்சரிக்கும் வல்லுநர்!
உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாக நேரிட்ட பெரும் வெள்ளத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும் 50 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
உத்தரகாசி நகரில் உள்ள ஹார்சில் அருகில் உள்ள தாராலியில் திடீரென மேகவெடிப்பு நேரிட்டதால் குறுகிய நேரத்தில் அதீத கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு நேரிட்டது. தாராலி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பெரும் வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. குறிப்பாக சந்தைப்பகுதி முற்றிலும் சேதமுற்றது. மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு நேரிட்டதாக மாவட்ட ஆட்சியர் பிரகாசாந்த் ஆர்யா உறுதி செய்துள்ளார். 25 தங்கும் விடுதிகள் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
கீர் கங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தாராலி கிராமத்தில் உள்ள வீடுகள், கடைகள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளப்பெருக்கில் நால்வர் உயிரிழந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 பேர் வரை கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஆந்திராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி, உத்தரகாசியில் நேரிட்ட மேக வெடிப்பை அடுத்து நேரிட்ட பேரிழப்பு குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். மாவட்ட நிர்வாகம், இந்திய ராணுவம், மாநில, தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார். வரும் 10ஆம் தேதி வரை உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் புதிய தலைமுறை டிஜிட்டலிடம் இந்நிகழ்வு குறித்துப் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் பேசினார். அவர் கூறுகையில், “இனிமேல் மழைப்பொழிவு என்பது பழைய சினிமாக்களின் வருவதுபோல் மும்மாரி மழைப்பொழிவு என்றெல்லாம் இருக்காது. இனிமேல் மூன்று மணி நேரத்திற்கு எவ்வளவு மழை பொழிகிறது என்பதுதான் கணக்கு. இனிமேல் 90 செமீ மழை என்பதெல்லாம் இயல்பாக இருக்கும். இவற்றை எதிர்கொள்ள நாம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான் இத்தகைய பேரிடரை நாம் எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும்.
காலநிலை மாற்றத்தினைப் பொறுத்தவரை அந்த மாற்றங்களை மட்டுப்படுத்துவது என்பது ஒன்று. குறிப்பாக கார்பன் உமிழ்வைக் குறைத்து கார்பன் சமநிலையை வெகு விரைவில் அடைய வேண்டும். ஆனால், இன்றே தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடைகிறது என்றால் கூட இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதைத் தடுக்க முடியாது. ஆனால், எப்படி அதை சரிப்படுத்தப்போகிறோம் என்றால், நீர்நிலைகளை பாதுகாப்பது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள கட்டடங்களை ஒழுங்கமைப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன.
இந்த உத்தராகண்ட் வீடியோவிலேயே கூட ஒவ்வொரு ஆற்றுக்கும் வெள்ளப்படுகைகள் என்ற ஒன்று இருக்கும். அந்தப் படுகைகளில் நூறாண்டுகளுக்குக் கூட தண்ணீர் செல்லாமல் இருக்கலாம். ஆனால், அங்கு கட்டடங்களைக் கட்டக்கூடாது. ஒருவேளை அந்த ஆற்றை ஒட்டிய பகுதிகளில் ரெசாட்டுகளும், வீடுகளும் இல்லையென்றால் இந்த அளவுக்குப் பாதிப்புகள் இருக்காது.
கிராமங்களில் நீர்நிலைகளுக்குள் விவசாயம் பார்ப்பார்கள். ஆனால், அவர்களுக்கு எப்போது தண்ணீர் வரும் என்பது தெரியும். ஆனால், நாமோ வெள்ளப்படுகைகளில் கட்டடங்களைக் கட்டுகிறோம். முதலில் நாம் வெள்ளப்படுகைகளை அறிவிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் நாம் அதை அறிவிப்பது கிடையாது.
மேலும், இதுதொடர்பான விஷயங்கள் நடக்கும்போது மக்களுக்கு எப்படி தற்காத்துக் கொள்வது என்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.