விசாரணைக்கு சென்றுவந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மரணம்.. இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் மீது வழக்கு!
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நைனா (78 வயது) என்பவர், தனது நிலத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைனாவின் தம்பி மனைவி சரிதா திருநாவலூர் காவல் நிலையத்தில் கொடுத்த பொய் புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் மிரட்டுவதால் தற்கொலை முடிவை எடுத்துக் கொண்டதாக நைனா உருக்கமான கடிதம் வைத்துவிட்டு உயிரைவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் திருநாவலூர் காவால் ஆய்வாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நைனா (78). இவருக்கும் அவருடைய தம்பி மனைவி சரிதா என்பவருக்கும் இடையே நில சம்மந்தமாக தகராறு ஏற்பட்ட நிலையில், திருநாவலூர் காவல் நிலையத்தில் சரிதா என்பவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மூன்று பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு இன்று காலை தனது நிலத்தில் நைனா தற்கொலை செய்து கொண்டார். கடிதத்தில் தம்பி மனைவி சரிதா திருநாவலூர் காவல் நிலையத்தில் கொடுத்த பொய் புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் மிரட்டுவதால் தற்கொலை முடிவை எடுத்துக் கொண்டதாக கடிதத்தில் குறிப்பிட்டு தற்கொலை செய்து கொண்டு விபரீத முடிவை எடுத்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருநாவலூர் போலீசார் நைனா உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் மீது வழக்கு..
பின்னர் சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. இதனிடையே சம்பவம் தொடர்பாக உயிரிழந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நைனா மனைவி பழனியம்மாள், திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் தற்பொழுது இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக திருநாவலூர் காவல் ஆய்வாளர் இளையராஜா உட்பட ஏழு பேர் மீது திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் முதல் குற்றவாளியாக காவல் ஆய்வாளர் இளையராஜா சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு நைனா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனைவரையும் கைது செய்யக்கோரி உயிரிழந்த நைனாவின் உறவினர்கள் தெரிவித்திருந்த நிலையில், அசம்பாவிதங்களில் ஈடுபடாமல் இருக்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், நைனாவின் சொந்த ஊரான ஏ.அத்திப்பாக்கம் கிராமத்திலும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.