பிகார் தேர்தல் | இன்று வெளியாகிறது அறிவிப்பு.. களம் எப்படி?
பிகார் சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் வருகின்ற நவம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், பிகார் சட்டமன்றத் தேர்தல் குறித்தான அட்டவணையை, இன்று மாலை 4 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவிக்க இருக்கிறார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. கடந்த ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணி முடிவடைந்து, அண்மையில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது வெளியிடப்பட்ட பட்டியலின்படி, பிகாரில் மொத்தம் 7 கோடியே 42 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன் 7 கோடியே 89 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், 47 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நீக்கம் எல்லாம் பலமுறை சரிபார்க்கப்பட்டே மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
சிறப்புத் தீவிர திருத்த மேற்கொள்ளப்பட்ட உடன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். தொடர்ந்து, வாக்காளர் அதிகார யாத்திரையை மேற்கொண்டார். இதன் காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பிகார் மாநிலம் இந்திய முழுவதும் பேசுபொருளாகவே இருந்தது. மிக முக்கியமாக, தேர்தல் ஆணையம் நிர்வாகம் சார்ந்த விவகாரம் என இதனைக் கூறிவரும் நிலையில், எதிர்க்கட்சியினரோ இதை முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது என்று தெரிவிக்கின்றனர். மேலும், நிர்வாகம் சார்ந்த நடைமுறைதான் என்றால் அதற்கான ஆதாரங்களை வெளியிடுங்கள் என ராகுல்காந்தி தெரிவிக்கிறார்.
இந்நிலையில், 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பிகார் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடையும் நவம்பர் மாதத்திற்கு முன்பே சட்டமன்றத் தேர்தலை நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல கட்ட ஆலோசனைகளை கடந்த சில மாதங்களாக நடத்தி வந்தது. இத்தகைய சூழலில்தான், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஆய்வுப்பணிகள் பிகாரில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர், "மாநிலத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலை சுமூகமாக நடத்தி முடிப்பதற்காக வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது 17 புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில்தான், பிகார் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது. அதன்படி, இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட இருக்கிறார்.
கடந்த, 2020 கொரோனா காலக்கட்டத்தில் பிகாரில் நடைபெற்ற தேர்தலை, அக்டோபர் முதல் நவம்பர் வரை 3 கட்டங்களாக இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி இருந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட மாகாகத்பந்தன் கூட்டணி 110 இடங்களை பெற்றிருந்தது. தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் உருவானது. இந்த நிலையில், இந்த வருடம் நடக்கும் பிகார் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மற்றும் விகாசில் இன்ஸான், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி (பசுபதி) உள்ளிட்ட கட்சிகள் மகாகத்பந்தன் கூட்டணியை அமைத்திருக்கின்றன.
மறுமுனையில், ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் பாஜக, லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து களத்தில் இருக்கின்றன.
மேலும், இந்தத்தேர்தலில் தேர்தல் வியூக நிபுணராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோரும் தனது ஜன் சுராஜ் கட்சியுடன் களத்தில் உள்ளார். பிரசாந்த் கிஷோரின் இந்த கட்சி பிகார் தேர்தலில் வெற்றிக்கான வாக்குகளை பிரிக்கும் என பார்க்கப்படுகிறது. இளைஞர்களின் ஆதரவு பெரும்பான்மையாக பிரசாந்த் கிஷோருக்கு இருக்கிறது. இவ்வாறு பிகார் தேர்தல் களத்தில் கடுமையான போட்டி நிலவுகிறது.