மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடா..? ராகுல் வைத்த பகீர் குற்றச்சாட்டு.. விளக்கம் கேட்டு EC கடிதம்!
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மஹாயுதி கூட்டணி அபார வெற்றிபெற்றது. இந்தக் கூட்டணியில் பாஜகவுடன் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் உள்ளன. இந்தக் கூட்டணி, 235 இடங்களில் மகத்தான வெற்றியைப் பெற்றது. தவிர, பாஜக 132 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மகாயுதி கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்த சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் முறையே 57 மற்றும் 41 இடங்களைப் பெற்றன. இதைத் தொடர்ந்து முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியில் உள்ளனர்.
ஆனால், இந்தத் தேர்தலில் மகா விகாஸ் அகாடி (MVA) கூட்டணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. காங்கிரஸ் வெறும் 16 இடங்களை மட்டுமே வென்றது. அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா (UBT) 20 இடங்களை வென்றது, அதே நேரத்தில் NCP (ஷரத் பவார் பிரிவு) 10 இடங்களை மட்டுமே பெற்றது. இதையடுத்து, இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகிறார். முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக ராகுல், ”மகாராஷ்டிராவில் உள்ள பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை, ஒட்டுமொத்தமான வாக்காளர் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில், மகாராஷ்டிராவில் நடைபெற்றதாகக் கூறப்படும் தேர்தல் முறைகேடுகளை விவரிக்கும் ஒரு செய்தித்தாள் கட்டுரையை இணைத்து ராகுல் வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவில், "2024ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்கள் ஜனநாயகத்தை மோசடி செய்வதற்கான ஒரு வரைபடமாகும். இது எப்படி நடந்தது என்பதை எனது கட்டுரை படிப்படியாகக் காட்டுகிறது" எனத் தெரிவித்திருந்தார்.
அதில், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மோசடி செய்ய பயன்படுத்தப்பட்டதாக நம்பும், ஐந்து படி செயல்முறையை ராகுல் காந்தி கோடிட்டுக் காட்டியிருந்தார். அடுத்தகட்ட நடவடிக்கைகளில் வாக்காளர் எண்ணிக்கையை உயர்த்துவது, பாஜக வெற்றிபெறத் தேவையான இடத்தில் போலி வாக்குகளை குறிவைப்பது மற்றும் ஆதாரங்களை மறைப்பது ஆகியவை அடங்கும் என்று அவர் மேலும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா தேர்தலில் மோசடி செய்ததாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியது தொடர்பாக, தேர்தல் ஆணையம் முறையாக அவருக்கு கடிதம் எழுதியுள்ளது. அனைத்து தேர்தல்களும் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிகளின்படி கண்டிப்பாக நடத்தப்படுவதாக அது தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பணியாளர்கள் முழு வாக்குப்பதிவு நடவடிக்கையிலும் ஈடுபடுவதாகவும் அது வலியுறுத்தியது.
மேலும் அது, தேர்தல் ஆணையம், முழு தேர்தல் செயல்முறையும் சட்டமன்றத் தொகுதி மட்டத்தில் பரவலாக்கப்பட்ட முறையில் நடத்தப்படுவதாகக் கூறியுள்ளது. இதில் ”1,00,186க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLOக்கள்), 288 தேர்தல் பதிவு அதிகாரிகள் (EROக்கள்), 139 பொது பார்வையாளர்கள், 41 காவல்துறை பார்வையாளர்கள், 71 செலவு பார்வையாளர்கள் மற்றும் 288 தேர்தல் அதிகாரிகள் (ROS) ஆகியோர் ஆணையத்தால் நியமிக்கப்பட்டனர். மகாராஷ்டிரா முழுவதும் 1,08,026 பூத் நிலை முகவர்கள் (BLA) தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படுகிறார்கள், இதில் 28,421 காங்கிரஸ் கட்சியினரும் அடங்குவர்” என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், ”இதில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், நீங்கள் எங்களுக்கு எழுதலாம், மேலும் அனைத்துப் பிரச்னைகளையும் விவாதிக்க பரஸ்பரம் வசதியான தேதி மற்றும் நேரத்தில் உங்களை நேரில் சந்திக்க ஆணையம் தயாராக உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.