மகாராஷ்டிரா | கூட்டணியில் விரிசலா? அதிருப்தியில் ஏக்நாத் ஷிண்டே!
மகாராஷ்டிராவில் அபார வெற்றி பெற்று மீண்டும் மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைத்தது. இதில் பாஜகவுடன் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் உள்ளன. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலவர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியில் உள்ளனர். இந்த நிலையில், ஆளும் பாஜக-சிவசேனா-என்சிபி கூட்டணிக்குள் விரிசல் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதற்குக் காரணம், சில எம்எல்ஏக்களுக்கு 'ஒய்' பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதுதான் என தெரிய வந்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஷிண்டே பாஜகவுடன் கைகோர்த்த பிறகு, மகாராஷ்டிரா அரசு 44 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவரை ஆதரித்த 11 மக்களவை எம்பிக்களுக்கு Y பாதுகாப்பு வழங்கியது. பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில், தற்போது அமைச்சர்கள் அல்லாத அனைத்து சிவசேனா எம்எல்ஏக்கள் மற்றும் கட்சித் தலைவரின் முக்கிய உதவியாளர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது Y பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அதேபோல் பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பாதுகாப்பால் சிவசேனாவால் பாதிக்கப்பட்ட தலைவர்கள் 20 பேர் என்று கூறப்படுகிறது. மேலும், இதுவரை மூன்று கட்சிகளில் இதுவே அதிகபட்சம் எனவும் இதனால் அக்கட்சி வருத்தமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே முதலமைச்சர் பதவி தனக்கு வழங்கப்படவில்லை என்பதில் அதிருப்தி அடைந்திருக்கும் ஷிண்டேவுக்கு, அவர் எதிர்பார்த்தபடி இரண்டு துறை அமைச்சர்கள் பதவியும் வழங்கப்படவில்லை. தவிர, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால், ஏக்நாத் ஷிண்டே கடும் வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் நடைபெற்ற நாசிக் 2027 தொடர்பான கும்பமேளா ஆய்வுக் கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே கலந்துகொள்ளாமல் தவிர்த்துள்ளார். தவிர, அவரது தலைமையில் வேறொரு கூட்டமும் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து, அக்கூட்டணியில் விரிசல் உண்டாகியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஆனாலும், இதை பாஜக மறுத்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர ஐடி அமைச்சரும் பாஜக தலைவருமான ஆஷிஷ் ஷெலர், ”கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை. மகாயுதியில் எல்லாம் நன்றாகவே நடக்கிறது. முதல்வர் ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர்கள் ஷிண்டே மற்றும் பவார் ஆகியோர் இணைந்து அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், சிவசேனா எம்எல்ஏக்களின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டார்.