மகாராஷ்டிரா | அடுத்த முதல்வர் யார்? எதிர்பார்ப்புக்கு பதிலளித்த ஏக்நாத் ஷிண்டே!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி, ஒரேகட்டமாக 288 தொகுதிகளைக் கொண்ட மகராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணி அமோக வெற்றிபெற்றது. அந்தக் கூட்டணி, 235 தொகுதிகளைக் கைபற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியன உள்ளன.
இதனால், பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது. என்றாலும், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தற்போதே தொடங்கிவிட்டது. குறிப்பாக, யார் முதல்வர் என்பதில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே, மகாரஷ்டிர சட்டமன்றத்தின் பதவிக்காலம் காலாவதி ஆன நிலையில் நேற்றைய தினம் ஏக்நாத் ஷிண்டே ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது முதல்வர் பதவிக்கான ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அடுத்த அரசு அமையும் வரை அவர் காபந்து முதல்வராக இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, “என்னை ஒரு முதலமைச்சராக எப்போதும் நான் கருதியதில்லை. சாமானிய மனிதனாகவே கருதுகிறேன். எனக்கு என்ன கிடைக்கிறது என்பது முக்கியமில்லை, மக்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து மக்களுக்காக இதுவரை நான் செய்த பணிகள் திருப்தி அளிக்கின்றன.
மீண்டும் முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை. என்டிஏ கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியே இதில் முடிவெடுக்க வேண்டும் என்று நான் அவரிடம் தெரிவித்துள்ளேன். அவர் எந்த முடிவு எடுத்தாலும் அதை இறுதி முடிவாக நாங்கள் ஏற்போம். அவர்கள் எடுப்பதே இறுகி முடிவு” எனத் தெரிவித்துள்ளார்