மகாராஷ்டிரா | 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த சேனா சகோதரர்கள்.. சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே!?
அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்தியை அறிமுகப்படுத்த மகாராஷ்டிரா பாஜக அரசு நடவடிக்கை எடுத்ததை அடுத்து, அங்கு எதிர்ப்பு கிளம்பியது. அதாவது, மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி பொதுவான மூன்றாவது மொழியாக இருக்கும் எனவும், மூன்றாவது மொழியாக அதனை கற்பிக்க வேண்டுமென அரசாணையை மாநில அரசு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த சகோதரர்கள் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் ஒன்றிணைந்து பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கிடையே, இந்த விஷயத்தில் பாஜக அரசு பின்வாங்கியது.
எனினும், இந்தப் பேரணியை தங்களின் கொண்டாட்டப் பேரணியாக உத்தவ் தாக்கரே சகோதரர்கள் நடத்தினர். அவர்களுடைய சேர்க்கை, அரசியல்ரீதியாகப் பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம், இந்த ஆண்டு மும்பையில் மாநகராட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே சிவசேனா இரண்டு பிரிவுகளாக உள்ளது. உத்தவ் தாக்கரே ஒரு பிரிவாகவும், ஏக்நாத் ஷிண்டே மற்றொரு பிரிவாகவும் உள்ளது. எனினும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாதான் உண்மையானதாக இருக்கிறது. அதேநேரத்தில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மொழிப் பிரச்னையால் தற்போது ஒன்று சேர்ந்திருக்கும் சேனா சகோதரர்களால், ஏக்நாத் ஷிண்டேவுக்குச் சிக்கலை உண்டாக்கியிருக்கிறது.
ஏக்நாத் ஷிண்டேவின் கிளர்ச்சியால் சிவசேனா பிளவுபடுவதற்கு முன்பு, கடைசியாக 2017ஆம் ஆண்டு, மும்பையில் மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு, இந்த ஆண்டுதான் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் இரு சேனா பிரிவுகளுக்கும் இடையிலான மற்றொரு கௌரவப் போராட்டமாகும். மும்பை பெருநகரப் பகுதி பிரிக்கப்படாத சேனாவின் கோட்டையாக இருந்தது. மேலும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் மொழிப் பிரச்னை இந்தத் தேர்தலில் ஒரு முக்கிய பேசுபொருளாக இருக்கும். எனவே, இந்த தேர்தலில் சேனா சகோதரர்களிடம் ஷிண்டே கடுமையான போட்டியை எதிர்கொள்வார் எனக் கூறப்படுகிறது.
சேனா வாக்காளர் தளத்தை தனக்கு சாதகமாக மாற்ற, அவர் மராத்தி வாக்காளர்களை அணுக வேண்டும். ஆனால் பாஜகவுடனான அவரது கூட்டணி எதிர்க்கட்சிகளின் மராத்தி எதிர்ப்பு தாக்குதலுக்கு அவரை ஆளாக்கியுள்ளது. இதனால், அவரைச் சிக்கலில் தள்ளியுள்ளது. அதேநேரத்தில் உத்தவ் தாக்கரே சிவசேனா கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை்விட இரண்டு இடங்கள் அதிகமாக, அதாவது ஒன்பது இடங்களை வென்றது. அதேநேரத்தில், மாநிலத் தேர்தலில் உத்தவ் தாக்கரே பின்னடைவைச் சந்தித்தாலும், தற்போது சகோதரர் ராஜ் தாக்கரேயுடனான மீண்டும் இணைந்திருப்பதால், அது மும்பை மாநகராட்சித் தேர்தலில் எதிரொலிக்கும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.