மகாராஷ்டிரா|கிளம்பிய இந்தி எதிர்ப்பு... பின்வாங்கிய பாஜக அரசு!
மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ.க சிவசேனா, தேசியவாத காங் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மராத்தி மற்றும் ஆங்கிலவழிக் கல்வி பள்ளிகளில், 1 முதல் 5ம் வகுப்பு வரை ஹிந்தி பொதுவான மூன்றாவது மொழியாக இருக்கும் என்றும், மூன்றாவதாக வேறு ஒரு மொழியை கற்க விரும்பினால், அதற்கு 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒப்புதல் தர வேண்டும் என்றும், திருத்தப்பட்ட அரசாணையை மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது.
ஆனால், இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துவந்தன. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 5ம் தேதி, கிர்காம் சவுபாட்டியில் இருந்து தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானம் வரை மாபெரும் பேரணிக்கு அங்குள்ள நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே அழைப்பு விடுத்தார். 19 ஆண்டுகளாக பிரிந்திருந்த, உத்தவ் பால் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், அவர் அழைப்பை ஏற்று இந்த போராட்டத்தில் பங்கேற்க ஒப்புக் கொண்டார். பிற அரசியல் கட்சியினருக்கும் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், பாஜக அரசு தன் முடிவில் இருந்து பின்வாங்கியது. சர்ச்சைக்குள்ளான மும்மொழிக் கொள்கை தொடர்பான அரசாணைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மஹாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ், ”மும்மொழிக் கொள்கை முடிவு முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. மூன்று மாதங்களில் மாநிலத்தின் மொழிக் கொள்கை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மூத்த கல்வியாளர் நரேந்திர ஜாதவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார். இந்தியை பின்வாசல் வழியாக திணிக்க முயல்வதாக எதிர்க்கட்சிகள் முழக்கமிட்ட நிலையில், பாஜக அரசின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.