இந்தி மொழி திணிப்பு | முதல்வர் ஸ்டாலின் பதிலுக்கு உத்தவ் சேனா தரப்பு எதிர்வினை!
மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு & எதிர்ப்பு
அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்தியை அறிமுகப்படுத்த மகாராஷ்டிரா பாஜக அரசு நடவடிக்கை எடுத்ததை அடுத்து, அங்கு எதிர்ப்பு கிளம்பியது. அதாவது, மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி பொதுவான மூன்றாவது மொழியாக இருக்கும் எனவும், மூன்றாவது மொழியாக அதனை கற்பிக்க வேண்டுமென அரசாணையை மாநில அரசு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த சகோதரர்கள் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் ஒன்றிணைந்து பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கிடையே, இந்த விஷயத்தில் பாஜக அரசு பின்வாங்கியது. எனினும், இந்தப் பேரணியை தங்களின் கொண்டாட்டப் பேரணியாக உத்தவ் தாக்கரே சகோதரர்கள் நடத்தினர்.
கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற இப்பேரணியில் உரையாற்றிய ராஜ் தாக்கரே, ”இந்தியாவில் இந்தி மொழி பேசும் மாநிலங்களைவிட, அதனை பேசாத மாநிலங்களே அதிக வளர்ச்சிஅடைந்துள்ளது. அப்படி என்றால் 3ஆவது மொழிக்கு என்ன தேவை இருக்கிறது” என கேள்வி எழுப்பினார்.
அதேபோல் உத்தவ் தாக்கரே, “இந்தியாவில் பல மன்னர்கள் ஆட்சி செய்த போதும், அவர்கள் தங்களது மொழிகளை மக்களிடம் திணிக்கவில்லை. மாறாக இந்தியை பாஜக அரசு மாநிலங்கள் மீது திணிப்பது ஏன்” என வினவினார்.
இந்தி திணிப்பு எதிர்ப்புக்கு ஸ்டாலின் உற்சாகம்
இந்தி மொழித் திணிப்பைத் தொடர்ந்து எதிர்த்துவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, இந்தப் பேச்சு மேலும் உற்சாகத்தைத் தந்தது. இதையடுத்து அவர், ”தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள். இந்தித் திணிப்புக்கு எதிராகச் சகோதரர் உத்தவ் தாக்கரே அவர்கள் தலைமையில் இன்று மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது” எனத் தெரிவித்தார். மேலும் அவர், ”இந்தி திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், 'இந்தி படித்தால் வேலை கிடைக்கும்' என்ற பசப்பு வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளை போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அறிவுக் கண்களைத் திறக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.
ஸ்டாலின் கருத்துக்கு உத்தவ் சேனா எதிர்வினை
மு.க.ஸ்டாலின் இப்படிப் புகழ்ந்த நிலையில், உத்தவ் தாக்கரே தரப்பில் இருந்து ஸ்டாலினின் நிலைபாட்டிற்கும், தங்களின் நிலைபாட்டிற்கும் வேறுபாடு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத், "இந்தி திணிப்புக்கு எதிரான அவர்களின் நிலைப்பாடு என்னவென்றால், அவர்கள் இந்தி பேசமாட்டார்கள், யாரையும் இந்தி பேச விடமாட்டார்கள். ஆனால் மகாராஷ்டிராவில் அது எங்கள் நிலைப்பாடு அல்ல. நாங்கள் இந்தி பேசுகிறோம். தொடக்கப் பள்ளிகளில் இந்தி திணிப்பை பொறுத்துக் கொள்ள முடியாது என்பதே எங்கள் நிலைப்பாடு. எங்கள் போராட்டம் இதற்கு மட்டுமே. நாங்கள் இந்தி திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள், இசை கேட்கிறோம். யாரும் இந்தியில் பேசுவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்கள் போராட்டம் தொடக்கக் கல்வியில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்ப்பது மட்டுமே” எனத் தெரிவித்துள்ளார்.