ரூ.1,800 கோடி நில முறைகேடு.. மகனை கைவிட்டாரா துணை முதல்வர்? மகாராஷ்டிரா அரசியலில் புதிய பூகம்பம்!
மஹாராஷ்டிராவில் துணை முதல்வர் அஜித்பவாரின் மகன் தொடர்பான நில முறைகேடு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ₹1,800 கோடி மதிப்புள்ள அரசு நிலம் முறைகேடாக விற்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அஜித்பவார் தனது மகன் தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார். முதலமைச்சர் ஃபட்னாவிஸ் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மஹாராஷ்டிாவில் துணை முதலமைச்சர் அஜித்பவாரின் மகன் நிறுவனத்திற்கு முறைகேடாக ₹1,800 கோடி மதிப்புள்ள அரசு நிலம் விற்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பவார் பங்குதாரராக உள்ள 'அமேடியா எண்டர்பிரைசஸ் எல்.எல்.பி.' (Amadea Enterprises LLP) என்ற நிறுவனத்திற்கு ₹300 கோடிக்கு அந்த நிலம் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விற்பனையின் போது, அரசுக்குச் செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை விலக்கு அளிக்கப்பட்டதாகவும், இதில் விதிமீறல்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அரசு, ஏற்கனவே ஒரு தாசில்தார் மற்றும் ஒரு துணைப் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. நிலம் அரசுக்குச் சொந்தமானது என்பதால், அதைத் தனிநபருக்கு விற்க முடியாது என்றும், பதிவு செய்வதற்கு முன் உரிய அதிகாரியிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெற்றிருக்க வேண்டும் என்றும் பதிவாளர் அலுவலகத்தின் உத்தரவு குறிப்பிடுகிறது.
ஆனால், இந்த ஒப்பந்தம் NOC இல்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த முறைகேடு குறித்து முழுமையான விசாரணைக்கு முதலமைச்சர் பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். நிலம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து கேட்டுப் பெற்றிருப்பதாகவும், உண்மை கண்டறியப்படும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித்பவார், தனது மகன் பார்த் பவார் தொடர்புடைய நிறுவனம் மீதான புனே நில ஒப்பந்தம் குறித்த சர்ச்சையில் இந்த விவகாரத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என முதல் முறையாக பேசியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித்பவார், "இந்த நில ஒப்பந்த விவகாரத்துடன் நான் துளி கூட தொடர்புடையவன் அல்ல. பரப்பப்படும் எந்த அறிக்கைகளும் எனக்குத் தெரியாது" என்று கூறினார். "நான் எந்தவொரு தவறுக்கும் துணை போக மாட்டேன் என்று ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். இந்த வழக்கின் விவரங்களை நான் தனிப்பட்ட முறையில் ஆராய்வேன்" என்று அவர் உறுதியளித்தார்.
"எங்கள் உறவினர்களுக்கோ அல்லது கட்சி ஊழியர்களுக்கோ பயன் அளிக்கும் வகையில் நான் ஒருபோதும் எந்த அதிகாரியையும் அழைத்ததில்லை" என்றும், " பிள்ளைகள் வளர்ந்த பிறகு, அவர்கள் தங்கள் சொந்தத் தொழிலைச் செய்கிறார்கள்" என்றும் அவர் கூறினார். மேலும், "யாராவது தவறு செய்தால் அல்லது விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டால், நான் ஒருபோதும் அவர்களுக்கு ஆதரவளிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

