சரத் பவார் - அஜித் பவார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் இணையும் தேசியவாத காங்கிரஸ்?
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியிலான அரசு அமைந்துள்ளது. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். இந்தக் கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் உள்ளது. இவர்கள் இருவரும் துணை முதல்வர்களாக உள்ளனர். முன்னதாக, ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவை உடைத்து அதிலிருந்து வெளியேறினார். அதுபோல் அஜித் பவார், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.
இதில், கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அஜித் பவாரின் கட்சி பெருத்த தோல்வியைச் சந்தித்தது. ஆனால், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 41 இடங்களை வென்று ஆச்சர்யப்படுத்திய நிலையில், சரத் பவாரின் கட்சியோ வெறும் 10 இடங்களில் மட்டுமே வென்று பரிதாப நிலையைச் சந்தித்து.
இதனால், அக்கட்சியின் மீது அதிக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதையடுத்து, அவர் தனது அடையாளத்தை உருவாக்கவும் கட்சியின் சின்னத்தைப் பெறவும் போராடி வருகிறார். இந்த நிலையில் சரத் பவாருடன், அஜித் பவார் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
புனேவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள, அதன் உறுப்பினர்களான சரத் பவாரும், அஜித் பவாரும் வந்திருந்தனர். இந்த கூட்டத்திற்கு இடையே இருவரும், ரகசிய சந்திப்பு நடத்தி உள்ளனர். தனி அறையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவுகளும் இணைய வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்திவரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.
தேசியவாத காங்கிரஸின் தலைவராக இருந்த சரத் பவாரின் அண்ணன் மகன்தான் அஜித் பவார். அஜித் பவாருக்கு கட்சியில் முன்னுரிமையை வழங்கிய சரத் பவார், அவரை முழுமையாக நம்பினார். இதற்கிடையே, அஜித் பவாரின் பதவிகளைப் பறித்து அதை முழுவதுமாக தனது மகள் சுப்ரியா சுலேவிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில்தான் கட்சியை முழுமையாக அபகரிக்க நினைத்த அஜித், பாஜகவின் துணையோடு சரத் பவார் கட்சியை இரண்டாக உடைத்துக்கொண்டு வெளியில் வந்தார். அதோடு அதிகபட்ச எம்எல்ஏக்களின் ஆதரவோடு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் கமிஷனிடமிருந்து வாங்கிக்கொண்டார் என்பது பெற்றுக்கொண்டார்.