டெல்லி | 9 பேரை பலிகொண்ட கார் வெடிப்பு சம்பவம்; நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு.. நடப்பது என்ன?
டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவம் 9 பேரை பலிகொண்டது. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய புலனாய்வு முகமையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே மாலை 6 மணியளவில் HR26 CE 7674 என்ற பதிவு எண் கொண்ட ஒரு வெள்ளை ஹூண்டாய் i20 ரக கார் வெடித்து சிதறியது. அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் கார் வெடித்ததும் அலறியடித்து தப்பியோடினர். வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தைச் சுற்றி இருந்த 10க்கும் மேற்பட்ட கார்களும் தீப்பற்றி எரிந்தன.
பின்னர் தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏழு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 15 CAT ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 6.52 மணியளவில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த நிலையில், அதனால் ஏற்பட்ட தீயைக் கட்டுக்குள் கொண்டு வர இரவு 7:29 மணிவரை ஆனதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கார் வெடிப்பு நிகழ்ந்த இடத்தில், தேசிய புலனாய்வு முகமையினர் இரவு முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். டெல்லி காவல் துறையினர் தனிப்படை, சி.ஆர்.பி.எப், தேசிய பாதுகாப்பு படையினர், தடயவியல் நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி காவல் ஆணையர், ஐபி இயக்குநர் உள்ளிட்டோரிடம் சூழல் குறித்து கேட்டறிந்தார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு குறித்த தகவல்களை அமித் ஷா பகிர்ந்து கொண்டார். உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து அவரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுத்துக் கூறினார். டெல்லி முழுவதும் ஆய்வு மேற்கொள்ளும்படியும், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்படியும் பிரதமர் அறிவுறுத்தி உள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய நடவடிக்கை எடுக்கும்படியும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கார் வெடிப்பு சம்பவம் குறித்து, டெல்லி காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார். மாலை 6.52 மணியளவில் சிக்னலில் மெதுவாக ஊர்ந்து வந்த கார் வெடித்ததாக அவர் கூறியுள்ளார். அந்த காரில் சிலர் பயணித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, நிமிடத்திற்கு நிமிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், தகவல்களை பகிர்ந்துகொண்டு வருவதாகவும் டெல்லி காவல் ஆணையர் கூறியுள்ளார்.
கார் வெடிப்பு தொடர்பாகமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சம்பவம் நிகழ்ந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார். அவருக்கு காவல் துறை உயரதிகாரிகள், சம்பவம் குறித்து விளக்கினர். முன்னதாக அமித்ஷா, கார் வெடிப்பில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் அவர், கார் வெடிப்பு சம்பவத்திற்கான காரணத்தை விரைவில் கண்டறிவோம் என்றும் இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளோடு இன்று ஆலோசனை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செங்கோட்டை அருகேயுள்ள சிக்னலில், ஹுண்டாய் ஐ20 கார் வெடித்தது என்றும், அப்பகுதியிலுள்ள அனைத்து சிசிடிவிக்களையும் ஆராய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, அனைத்து கோணங்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ள அவர், விசாரணை முடிவுகளை மக்களிடம் தெரிவிப்போம் எனவும் உறுதியளித்துள்ளார்.
கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் உஷார்படுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில காவல் துறையினர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவலில், மும்பை, புனே உட்பட மாநிலம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய உத்தரப் பிரதேச சட்டம் ஒழுங்கு ஏடிஜி அமிதாப் யாஸ், வழிபாட்டு தலங்கள், பதற்றம் நிறைந்த பகுதிகள், எல்லை பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி டிஜிபி உத்தரவிட்டிருப்பதாக கூறியுள்ளார். பதற்றம் நிறைந்த பகுதிகளில் ரோந்துபணிகளை அதிகரிக்கவும், பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியை ஒட்டியுள்ள ஹரியானா மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகரிக்கும்படியும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வரலாற்று சின்னங்கள் அமைந்திருக்கும் பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக ஹரியானா முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கார் வெடிப்பு அடுத்து தமிழகம் முழுவதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மால்கள், வழிபாட்டு தலங்கள், மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை, கோயம்பேடு மார்கெட், தி.நகர், பூக்கடை, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையம் போன்ற மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் போன்ற ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் பிரிவின் உதவியுடன் பயணிகளின் உடமைகளை சோதனைசெய்து வருகின்றனர். மேலும், ரயில் பெட்டிகளிலும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னையில் இரவு நேர ரோந்து பணிகளும் கூடுதல் அளவில் இருந்தன.
தமிழக எல்லைகள், சோதனை சாவடிகளில் வாகன சோதனைகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு, ரோந்து பணி, சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக சென்னையில் ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
