மலேசியா அருகே படகு கவிழ்ந்து விபத்து| மியான்மர் அகதிகள் 100 பேர் மாயம்; பின்னணியில் வரலாற்று பிரச்னை
மியான்மர் ரோஹிங்கியா அகதிகள் மலேசியா நோக்கி பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 70 பேர் கொண்ட படகு கடலில் மூழ்கிய நிலையில், 13 பேர் மீட்கப்பட்டு, 11 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், (முன்னர் பர்மா) புத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். இந்த நிலையில், அந்நாட்டில் சமீபகாலமாக வன்முறைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், முஸ்லிம் ரோஹிங்கியாக்கள் பலர் மோசமான நிலையை எதிர்கொள்கின்றனர். இதனால், பாதுகாப்பு தேடி அவர்கள் எல்லையைக் கடந்து அண்டை நாடுகளின் முகாம்களுக்குச் செல்கின்றனர். அந்த வகையில், நூற்றுக்கணக்கான ரோஹிங்கியாக்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மியான்மரின் புதிடாங் நகரில் இருந்து மலேசியாவை நோக்கி ஒரு கப்பலில் ஏறியதாகக் கூறப்படுகிறது. அவர்கள், பின்னர் இரண்டு படகுகளில் பிரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தாய்லாந்து-மலேசியா எல்லை அருகே உள்ள லங்காவி பகுதியில் சென்றபோது பாரம் தாங்காமல் ஒரு படகு கடலில் மூழ்கியது. இதனையடுத்து மலேசிய கடலோர போலீசார் அங்கு விரைந்ததும் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. இந்த மூழ்கிய படகில் சுமார் 70 பேர் இருந்ததாகவும், அதேநேரத்தில் 230 பயணிகளை ஏற்றிச் சென்ற மற்றொரு படகின் கதி என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரையிலான மீட்புப் பணியில் 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாகவும், 11 உடல்களையும் கண்டுபிடித்திருப்பதாகவும் 100க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், தொடர்ந்து அவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் தொடக்கத்தில் மியான்மர் மற்றும் பங்களாதேஷைவிட்டு வெளியேற 5,100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் படகுகளில் ஏறினர். இதில், கிட்டத்தட்ட 600 பேர் இறந்ததாகவோ அல்லது காணாமல் போனதாகவோ ஐ.நா. அகதிகள் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ரோஹிங்கியாக்கள் என்பவர்கள் யார்? அவர்கள் தப்பிச் செல்லக் காரணம் என்ன?
ரோஹிங்கியாக்கள் என்பவர்கள் மியான்மர் வங்க தேச எல்லையில், ராகைன் எனப்படும் மாநிலத்தில் வாழும் முஸ்லிம் இனங்களில் ஒன்றுதான் ரோஹிங்யாக்கள் எனப்படும் இஸ்லாமிய இனக்குழுவினர். இவர்கள், ரோஹிங்கியா அல்லது ருயிங்கா என்ற மொழியைப் பேசுகிறார்கள், இது மியான்மர் முழுவதும் பேசப்படும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட ஒரு பேச்சுவழக்கு. அவர்கள், நாட்டின் 135 அதிகாரப்பூர்வ இனக்குழுக்களில் ஒன்றாகக் கருதப்படவில்லை. அனைத்து ரோஹிங்கியாக்களும் மியான்மரின் மேற்குக் கடற்கரை மாநிலமான ரக்கைனில் வசிக்கின்றனர். இது, நாட்டின் மிகவும் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாகும். 1982 முதல் மியான்மரில் அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது, அவர்களை நாடற்றவர்களாக மாற்றியுள்ளது.
மேலும் அரசாங்க அனுமதியின்றி வெளியேற அவர்களுக்கு அனுமதி இல்லை. இந்த நிலையில்தான், இனப்படுகொலை, வறுமை, தொடர்ச்சியான வன்முறை மற்றும் துன்புறுத்தல் காரணமாக, பல தசாப்தங்களாக லட்சக்கணக்கான ரோஹிங்கியாக்கள் தரை அல்லது படகு மூலம் மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு ஆபத்தான முறையில் படகுகளில் பயணம் மேற்கொள்கின்றனர்.
வங்கதேசத்தில் 7 லட்சம் ரோஹிங்கியாக்கள்!
அதிகரித்து வரும் மோதல்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக, கடந்த 18 மாதங்களில் சுமார் 1,50,000 ரோஹிங்கியாக்கள் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர். 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு பங்களாதேஷுக்குள் ரோஹிங்கியா அகதிகளின் மிகப்பெரிய நகர்வு இதுவாகும் என ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவிக்கிறது.
2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மியான்மரில் ஒரு மில்லியன் ரோஹிங்கியாக்கள் இருந்த நிலையில், அதே ஆண்டில் மியான்மர் ராணுவத்தால் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ரக்கைன் மாநிலத்தில் இருந்து சுமார் 7,50,000 ரோஹிங்கியாக்கள் கொடிய வன்முறையிலிருந்து அண்டை நாட்டுக்குத் தப்பி ஓடியுள்ளனர். இதில் 7,00,000 பேர் வங்கதேசத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
முன்பு மனிதாபிமான காரணங்களுக்காக மலேசியா ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொண்டிருந்தாலும், பாதுகாப்பு மற்றும் வளங்களின் பற்றாக்குறை காரணமாக சமீப காலங்களில் வருகைகளை கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது. ஐ.நா. தரவின்படி, மலேசியாவில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் எண்ணிக்கை சுமார் 1,17,670 ஆகும். அதே நேரத்தில் இன்னும் பல லட்சம் பேர் மியான்மரில் அடக்குமுறை ஆட்சியின் கீழ் உள்ளனர். மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு ரோஹிங்கியா முகாம்கள் மற்றும் கிராமங்களில் புதிய இயக்கக் கட்டுப்பாடுகளையும் உதவித் தடைகளையும் விதித்துள்ளது. இதனால் தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது, அத்துடன் நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடும் அதிகரித்துள்ளது.

