வங்கக்கடலில் உருவானது ‘அக்வான்’ புயல்.. 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்!
வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் 20ஆம் தேதி ஆந்திராவின் நெல்லூர்-துனி இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திரா மற்றும் ஒடிஷாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் அக்வான் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தீவிர புயலாகவும், 19ஆம் தேதி மிகத் தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
20ஆம் தேதி நண்பகல் நேரத்தில் ஆந்திராவின் நெல்லூர் - துனி இடையே மிகத் தீவிர புயலாக கரையை கடக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அந்த நேரத்தில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
அக்வான் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிஷாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அக்வான் புயல் வரும் 20ஆம் தேதி ஆந்திராவின் நெல்லூர் மற்றும் துனி இடையே, கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்களை முன்கூட்டியே பணியில் அமர்த்தவும், மின் தடைகள் ஏற்பட்டால் போர்க்கால அடிப்படையில் மின் விநியோகத்தை மீட்டெடுக்க தயார் நிலையில் இருக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று ஒடிஷாவில் கனமழையால் பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களை கண்டறிந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

