இன்று புயல்.. நாளையே தீவிரப் புயல்.. அச்சுறுத்தும் அக்வான்!
வங்கக்கடலில் உருவாகும் அக்வான் புயல், நாளையே அதிதீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. வட கடலோர தமிழகம், புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று உருவாகும் அக்வான் புயல் நாளையே அதிதீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. முன்னதாக, 18ஆம் தேதி தீவிரப் புயலாக மாறும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்னதாகவே அக்வான் புயல் வலுப்பெறுகிறது.
இந்தசூழலில் புயல் ஆந்திராவை நோக்கி செல்லும் என சொல்லப்படும் நிலையில், சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கடலோர தமிழகம் மட்டுமில்லாமல புதுவை மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது. தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது.
மேலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

