’அக்வான்’ புயல் வருகிறதா? இன்னும் ஒரு வாரம்தான்..!தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி?
செய்தியாளர் - கார்த்திகேயன்
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஆண்டில் வங்கக் கடலில் ’அர்னாப்’, ’முரசு’ ஆகிய இரண்டு புயல்கள் உருவாகியிருந்தன. இந்த இரு புயல்களில், அர்னாப்தான் மிக அதி தீவிர புயலாக பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. 155 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்று, கனமழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 26-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 4 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் சேதமடைந்தன. ’முரசு’ புயலாலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது. இப்படியான சூழ்நிலையில், வங்கக்கடலில் 3-வதாக இன்னொரு புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதாவது, இந்திய வானிலை மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று நிலவி வருவதாகவும், நவம்பர் 13-ஆம் தேதி அன்று, இது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவெடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 15-ஆம் தேதி அன்று இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடையும் என்றும், நவம்பர் 19-ல் இருந்து 25-ஆம் தேதிக்குள் புயலாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது என்றும், கணிக்கப்பட்டுள்ளது. இது புயலாக உருவெடுத்தால், ’அக்வான்’ என்று பெயரிடப்படும். இந்தப் பெயர் இஸ்ரேல் பரிந்துரைத்துள்ள பெயர். இந்தப் பெயருக்கு ’அரக்கன்’ என்று அர்த்தம்.
இந்த அமைப்பு தற்போது தெற்கு அந்தமான் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகி வருவதால், ஆரம்பத்தில் அந்தமான் & நிகோபார் தீவுகளில் பலத்த மழை பெய்யக்கூடும். இதன் பாதை மற்றும் திசை குறித்த கணிப்புகளின்படி, இது இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்பதால், தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் பரவலாக மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும், இது எங்கு கரையைக் கடக்கும் என்பது அதன் நகர்வைப் பொறுத்தே அமையும். இதுமட்டுமின்றி, அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில், நவம்பர் 15-ல் இருந்து 17-ஆம் தேதி வரை, மழையின் தாக்கம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

