காஷ்மீர் | சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 3 வீரர்கள் பலி!
பிரேம்குமார் சீ
ஜம்மு காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தின் பசந்த்கர் அருகே உள்ள காண்ட்வா பகுதியில் 23 சிஆர்பிஎஃப் வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கூடுதல் எஸ்.பி. சந்தீப் பட் பேசியதாவது...
இன்று காலை 10.30 மணியளவில் பசந்த்பூரில் ஒரு பணியை முடித்து விட்டு 23 சிஆர்பிஃப் வீரர்கள், 187-ஆவது பட்டாலியன் படைப்பிரிவைச் சார்ந்த பங்கர் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது, காண்ட்வா பகுதியில் சென்று கொண்டிருந்த போது சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்று கொண்டுருந்த போது அந்த வாகனம் ஒரு ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 15 வீரர்கள் காயம் அடைந்திருக்கின்றனர். அதில் சிலர் படுகாயங்களுடனும் இருக்கின்றனர்.
பிறகு மீட்புக்குழுவினர் மற்றும் காவல்துறையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைவாக வந்து சிஆர்பிஎஃப் வீரர்களை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த மீட்புப் பணியில் உள்ளூர்வாசிகள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டனர்” என்று தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து மத்திய அறிவியல் துறை இணையமைச்சரும் உத்தம்ப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜிதேந்திர சிங் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “ சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனம் விபத்துகுள்ளானது கவலையளிக்கிறது. அதில் பல துணிச்சலான வீரர்கள் இருந்தனர். மீட்புப் பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிக்கு உள்ளூர்வாசிகள் தாமாக முன்வந்துள்ளனர். இச்சம்பவத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளும் உறுதிசெய்யப்படும்” இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் துணைநிலை ஆளுநர் வெளியிட்டுள்ள பதிவில், “உத்தம்பூர் அருகே நடந்த விபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சேவையை ஒருபோதும் மறக்க மாட்டோம்” என்று அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.
வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.