சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. பாராட்டிய பிரதமர்.. பெருமிதம் கொண்ட தாயார்.. பாஜக வியூகம் என்ன?
குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்பாளர் அறிவிப்பு
பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதுவும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், திடீரென ராஜினாமா செய்தது விவாதத்தை ஏற்படுத்தியது. எனினும், மருத்துவக் காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். இதையடுத்து, குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக களமிறக்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக அவர் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு குறித்து பிரதமர் பாராட்டு
சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளர் தேர்வு குறித்து பிரதமர் தனது எக்ஸ் தளப் பதிவில்,சி.பி. ராதாகிருஷ்ணன் தாம் வகித்த பல்வேறு பதவிகளின்போது சமூகச் சேவையிலும், விளிம்பு நிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் கவனம் செலுத்தியதாக பாராட்டியுள்ளார். தமிழ்நாட்டில் அடிமட்ட நிலையில், அவர் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து தமிழக பாஜகவினர் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சி.பி.ராதாகிருஷ்ணனின் தாய் ஜானகி அம்மாள் பெருமிதம்
இதுகுறித்து சி.பி.ராதாகிருஷ்ணனின் தாய் ஜானகி அம்மாள், ”என் மகன் பிறந்தபோது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்போல் வரவேண்டும் என ஆண்டவனை பிரார்த்தனை செய்து பெயர் வைத்தோம். இன்று அது நிறைவேறும் தருணமாக மாறி உள்ளது. நிச்சயம் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் என் மகன் வெற்றிபெற்று தொடர்ந்து மக்கள் சேவையைச் செய்வார். இது திருப்பூருக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை கூட்டக்கூடிய தருணமாக அமைந்திருக்கிறது. என் மகன் சி.பி.ராதாகிருஷ்ணன் பெயரை பரிந்துரை செய்தபாஜகவிற்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி“ என அவர் தெரிவித்தார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு: பாஜக வியூகம் என்ன?
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தமிழ்நாட்டின் சி.பி.ராதாகிருஷ்ணன் பெயரை பாஜக அறிவித்திருப்பது பல்வேறு வகைகளிலும் வியூக முக்கியத்துவம் வாய்ந்தது. அதேநேரத்தில், குறைந்தது ஐந்து வியூகங்கள் இதன் பின்னணியில் சொல்லப்படுகின்றன. பொதுவாக, குடியரசுத் தலைவர் பதவியில், வடக்கைச் சேர்ந்தவர் அமர்த்தப்பட்டால் துணைத் தலைவர் பதவியை தெற்குக்கு ஒதுக்குவது என்பது மறைந்த பிரதமர் நேரு காலம் தொட்டு தொடரும மரபு. பாஜக மோடியின் ஆட்சிக் காலத்தில் இதை மீறவிட்டது என்கிற விமர்சனம் இருந்தது. இதன்மூலம் அந்த விமர்சனத்திற்கு பாஜக பதில் அளித்துள்ளது. மேலும், முக்கியமான பதவிகளுக்கு ஆட்களைக் தேர்ந்தெடுக்கும்போது அடுத்தடுத்துவரும் தேர்தல்களை மனதில்கொள்வது பாஜகவின் இயல்பு.
யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்?
2026இல் தமிழகம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் சூழலில், தமிழ்நாட்டு அரசியலுக்கு பாஜக கொடுக்கும் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது. தமிழ்நாட்டையும் தமிழர்களையும் பாஜக புறக்கணிக்கிறது எனும் திமுகவின் குற்றச்சாட்டை மறுக்க பாஜக இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். பாஜகவுக்கு தமிழ்நாட்டில் வலுவான கேந்திரங்களில் ஒன்று கோவை பிராந்தியம். அதிமுக கூட்டணிக்காக அதன் பொதுச்செயலாளர் பழனிசாமி கொடுத்த நிர்ப்பந்தத்தால், மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றியது பாஜக தேசிய தலைமை. இது கோவை பிராந்திய பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியிருந்தது. இப்போது அந்த அதிருப்திக்கு மருந்திட்டிருக்கிறது பாஜக தேசிய தலைமை. எல்லாவற்றிற்கும் மேல், "இன்றையதமிழக பாஜக முழுமையாக புதியவர்கள் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது; பழைய மதிப்பில்லை" என்ற ஒரு குற்றச்சாட்டும் முந்தைய தலைமுறை கட்சிக்காரர்களிடம் இருந்தது. தலைமைக்கு விசுவாசமாக இருந்தால், எந்த காலகட்டத்தில் வேண்டுமானாலும் எவ்வளவு உயரிய பதவியும் வந்தடையும் என்பதை இந்தத் தேர்வின்மூலம் தன்னுடைய கட்சியினருக்குச் சொல்லாமல் சொல்லி இருக்கின்றனர்மோடியும் அமித் ஷாவும்.
திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்து தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருந்து வருகிறார். 1998 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தே்லில், கோவை மக்களவை தொகுதி எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் சி.பி.ராதாகிருஷ்ணன். பின்னர் 2003ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராக இருந்தார். கோவையை பாஜகவின் கோட்டைகளில் ஒன்றாக மாற்றி அமைத்த பெருமையைp பெற்றார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.c