ஜகதீப் தன்கர் ராஜினாமா.. பிரிவு 67(a) சொல்வது என்ன... இதற்கு முன்பு இதேபோல் நடந்ததுண்டா?
ஜகதீப் தன்கர் ராஜினாமா: பிரிவு 67(ஏ) என்பது என்ன?
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மருத்துவ காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ’மருத்துவர்களின் அறிவுரையின்படி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ)இன் படி, எனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளேன். குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். குடியரசுத் தலைவரின் அசைக்க முடியாத ஆதரவிற்கும், அவர்கள் பகிர்ந்துகொண்ட நல்லுறவுக்கும் நன்றி’ என அதில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜகதீப் தன்கர் குறிப்பிட்டுள்ள பிரிவு 67(ஏ) நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ள நிலையில் அதுகுறித்து பார்ப்போம். இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(a), துணை குடியரசுத் தலைவர் ராஜினாமா செய்வதற்கான செயல்முறையை வகுக்கிறது. "குடியரசுத் துணைத் தலைவர் ஒருவர், குடியரசுத் தலைவருக்குத் தனது கையொப்பமிட்ட எழுத்துமூலம் தனது பதவியை ராஜினாமா செய்யலாம்” என அது வரையறுக்கிறது. அதாவது, இந்த விதி, துணைக் குடியரசுத் தலைவர் தனது ஐந்தாண்டுப் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே, எந்த நேரத்திலும் தானாக முன்வந்து ராஜினாமா செய்ய அனுமதிக்கிறது. இது, பிரிவு 67இன்கீழ் ஒரு துணைப் பிரிவாகும். இது துணைக் குடியரசுத் தலைவரின் பதவிக் காலத்தை கோடிட்டுக் காட்டுகிறது.
எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்ட ஜகதீப் தன்கர்
ஜக்தீப் தன்கர், கடந்த ஆகஸ்ட் 2022இல் துணைக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். ஐந்து ஆண்டுகால அதிகாரப்பூர்வ பதவிக்காலத்தின்படி, அவரது பதவிக்காலம் 2027இல் முடிவடைய உள்ளது. இருப்பினும், பிரிவு 67(a)ஐப் பயன்படுத்தி, பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது ராஜினாமாவை அவர் தற்போது சமர்ப்பித்துள்ளார். எனினும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய முதல் நாளிலேயே இந்த ராஜினாமா வந்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், இந்த மாதத் தொடக்கத்தில் பேசிய அவர், “சரியான நேரத்தில் ஓய்வுபெறுவேன்” எனத் தெரிவித்திருந்தார். தவிர, இதயம் தொடர்பான நோய்களைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 9ஆம் தேதி ஜக்தீப் தன்கர் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, டெல்லியில் கட்டுக்கட்டாகப் பணம் சிக்கிய விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மான நோட்டீஸை மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கரிடம் உறுப்பினர்கள் வழங்கினர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதாகவும் தன்கர் தெரிவித்திருந்தார்.
பதவிக்காலத்தில் ராஜினாமா செய்தவர்கள்
அதேநேரத்தில், பதவிக்காலத்தில் ராஜினாமா செய்த மூன்றாவது துணைத் தலைவர் இவர். இதற்கு முன்பு வி.வி.கிரி மற்றும் ஆர்.வெங்கடராமன் இப்படி ராஜினாமா செய்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கிரி மற்றும் வெங்கடராமன் ஆகியோர் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.