முடிவடையாத தொகுதி பங்கீடு.. சிபிஐக்கு எதிராக போட்டிபோடும் காங்கிரஸ்.. கூட்டணிக்குள் சிக்கல்
243 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய பிகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகக் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என மும்முனைப் போட்டி நிலவுவதால் களம் சூடுபிடித்திருக்கிறது. முதல்வர் நிதிஷ்குமாருடன் கைக்கோர்த்துள்ள பாஜகவுக்கு அக்கூட்டணியில் 101 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு சுமூகமாக முடிவடைந்த நிலையில் கட்சியினர் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர்.
மறுமுனையில் மகாகத்பந்தன் கூட்டணியில் இன்னும் குழப்பங்கள் நீடித்து வருகின்றன. ராஷ்டிரிய ஜனதா தளம் உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில், காங்கிரஸ் கட்சி தற்போது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
நவம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு அக்டோபர் 17 ஆம் தேதியான இன்று கடைசி நாளாகும். இந்நிலையில், 48 வேட்பாளர்கள் அடங்கிய, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, கட்சியின் மாநில தலைவர் ராஜேஷ் ராம், குட்டும்பா தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். இதேபோல், காங்கிரஸ் தேசிய பொதுச் செயலர்களில் ஒருவரான ஷகீல் அஹமது கான், கத்வா தொகுதியில் போட்டியிடுகிறார்.
கச்வாரா தொகுதியில் கரிப் தாஸ் போட்டியிடுகிறார். இங்கு மகாகத்பந்தன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது.