சிலிண்டர் தட்டுப்பாடு |சென்னையில் நிறுத்தி வைக்கப்படும் லாரிகள்.. பெங்களூருவில் உணவகங்கள் மூடல்!
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியால், பெங்களூருவில் உள்ள உணவகங்கள் இன்று முதல் மூடப்படும் என்று பெங்களூரு உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் போரால் தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. சென்னை மணலியில் உள்ள ஐ.ஓ.சி. சிலிண்டர் நிரப்பும் நிறுவனத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிறுவனத்தில் இருந்து வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றுவதற்காக சென்ற லாரிகள் சிலிண்டர் ஏற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ஒரு முகவருக்கு தினமும் 4 லாரிகள் ஏற்றப்படும் நிலையில், தற்போது ஒன்று அல்லது இரண்டு லாரிகள் மட்டுமே ஏற்றப்படுவதாக லாரி ஓட்டுநர்கள் கூறுகின்றனர். மறுபுறம், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியால், பெங்களூருவில் உள்ள உணவகங்கள் இன்று முதல் மூடப்படும் என்று பெங்களூரு உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் எல்.பி.ஜி. தேவையில் சுமார் 60 சதவீதம் சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் மேற்காசியப் போரால் அந்நாடுகளில் பதற்றம் நிலவி வருவதாலும், ஹார்முஸ் நீரிணை பாதை முடங்கியுள்ளதாலும் இந்தியாவின் எல்.பி.ஜி. விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், பெங்களூருவில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் இன்றுமுதல் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்களை மட்டுமே நம்பியிருக்கும் மாணவர்கள், முதியோர்கள், நோயாளிகள், தினக்கூலித் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
இதற்கிடையே பெட்ரோல், டீசல் விலையைஉயர்த்தக்கூடாது என பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேற்காசியப் போரின் தாக்கத்தால், சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பாக மத்திய அரசு அவசர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கிய பிறகு அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி, 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் புரொப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றை, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் தயாரிப்புக்கு மடைமாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 130 டாலரை தாண்டாத வரை எரிபொருள்கள் விலையேற்றப்படாது என கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இலங்கையில் எரிபொருள்கள் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு லிட்டர் 92 ஆக்டேன் பெட்ரோல் 317 ரூபாயாகவும், 95ஆக்டேன் பெட்ரோல் 365 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், வெள்ளை டீசல் 303 ரூபாய்க்கும், சூப்பர் டீசல் 353 ரூபாய்க்கும் விற்பனை விலை உயர்ந்துள்ளன. மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு 13 ரூபாய் உயர்த்தப்பட்டு 195 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்காக பல்வேறு இடங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டைப் போக்க, தேவையான அளவிற்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, எண்ணெய் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. அதேபோல், சர்வதேச அளவில் எரிபொருள்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் எடுக்கவும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். எரிபொருள் பயன்பாடு சிக்கன நடவடிக்கையாக, அரசு அலுவலகங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இயங்கும் என்றும், 50சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிஅளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

