7 மணி நேர போராட்டம்! 200 அடியில் சிக்கிய பிஞ்சு உயிர்!
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
சுற்றிலும் இருள்.. கண்ணுக்கு எட்டாத ஆழத்தில் ஒரு பிஞ்சுக் குழந்தை.. எப்போது வேண்டுமானாலும் என்ன நடக்கும் என்ற பதற்றம்.. சுமார் 200 அடி ஆழம் கொண்ட போர்வெல்லுக்குள் விழுந்த 2.5 வயது சிறுமி, பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள Sihi கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில், அப்பகுதியில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது ஏறி விளையாடியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்த சிறுமி, அருகில் இருந்த சுமார் 200 அடி ஆழம் கொண்ட போர்வெல்லுக்குள் விழுந்துள்ளார். சிறுமி போர்வெல்லுக்குள் விழுந்த தகவல் கிடைத்ததும், அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், ஹரியானா தீயணைப்புத்துறையினர், போலீசார், மருத்துவக் குழுவினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் என பல்வேறு குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போர்வெல்லின் ஆழம் ஒருபுறம் இருக்க.. குறுகலான பாதைக்குள் சிக்கியிருந்த சிறுமியை நேரடியாக வெளியே கொண்டுவர முடியாத நிலை. இதனால், போர்வெல்லைச் சுற்றிலும் மண்ணைத் தோண்டி, சிறுமி சிக்கியிருந்த பகுதிக்கு அருகில் சென்று மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்சிஜனும் தொடர்ந்து செலுத்தப்பட்டது. போர்வெல்லுக்குள் கேமராவும் செலுத்தப்பட்டு, சிறுமியின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. நேரம் செல்லச் செல்ல... பெற்றோர், உறவினர்கள் மட்டுமல்லாமல், அப்பகுதி மக்கள் அனைவரின் கவனமும் அந்த போர்வெல்லை நோக்கியே இருந்தது. இரவு நேரத்திலும் NDRF குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
7 மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணிக்குப் பிறகு, இன்று அதிகாலை 3.50 மணியளவில் அந்த சிறுமி போர்வெல்லில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட உடனேயே சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். பல மணி நேரத்துக்குப் பிறகு சிறுமி மீட்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
