இந்தியாவின் பணக்கார முதல்வர் யார்? பட்டியலில் விஜய்க்கு எந்த இடம்? ஏழை முதல்வர் யார் தெரியுமா?
இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் தென்னிந்தியாவை சேர்ந்த முதலமைச்சர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக டி.கே.சிவகுமாரை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் அதற்கு ஒப்புதல் அளித்த நிலையில், வரும் ஜூன் 3-ம் தேதி சிவகுமார் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவின் பணக்கார முதல்வர் என்ற பட்டியலில் சிவகுமார் முதலிடம் பிடித்துள்ளார். தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் 1,413 கோடி சொத்துக்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு 931 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தையும், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் 648 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா 55 லட்சம் சொத்து மதிப்புடன் கடைசி இடத்தை பிடித்துள்ளார். ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன் லால் சர்மா (Bhajan Lal Sharma) மற்றும் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி (Mohan Charan Majhi) ஆகியோர் 1 கோடி சொத்து மதிப்புடன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பணக்கார முதல்வர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களையும் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநில முதலமைச்சர்களே பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற தென்னிந்திய மாநிலங்களான கேரள முதல்வர் சதீசனின் சொத்து மதிப்பு 3 கோடி என்பதும், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சொத்து மதிப்பு 27.99 கோடி என்பதும், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் சொத்து மதிப்பு 30.04 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

