\
West Bengal Politics
West Bengal PoliticsLeft Rising in Bengal

சரியும் மம்தாவின் கூடாரம்| பாஜகவில் இணையும் 50 MLA-க்கள்? 2ஆம் இடத்தை பிடிக்கும் இடதுசாரிகள்?

மேற்கு வங்கத்தில் பாஜகவிடம் ஆட்சியை இழந்த சூழலில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அடித்தளம் கரைந்து வருவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
Published on

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக முதல்முறையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. பொதுவாகவே மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி மற்றொரு கட்சியிடம் ஆட்சியை இழந்தால் அந்த கட்சியின் கட்டமைப்பே சிதைந்து விடும்.

அங்கு முன்னர் ஆட்சி செய்த காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியோரும் ஆட்சியில் இருந்து இறங்கிய பின்னர் அவர்களின் கட்டமைப்பே சிதைந்தது. அந்த வகையில் தற்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சியின் அடித்தளமும் சிதையத்தொடங்கியுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து தற்போது வரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் பேசிய பாஜக எம்.பி.யான சௌமித்ரா கான் (saumitra khan), மத்திய தலைமை அனுமதி அளித்தால் சுமார் 50 திரிணாமூல் எம்.எல்.ஏ.க்களும், 20 எம்.பி.க்களும் பாஜகவுக்கு மாறத் தயாராக இருப்பதாக கூறி பதற வைத்தார்.

இந்த சூழலில் சமீபத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு மறுதேர்தல் நடத்தப்பட்ட ஃபால்டா சட்டப்பேரவை தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் அனைவர்க்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெறும் 3.70 சதவீத வாக்குகளை பெற்று நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தார். இது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மக்கள் ஆதரவை இழந்ததாகவே பார்க்கப்படுகிறது.

அதோடு இந்த மறுதேர்தலில் இடதுசாரி வேட்பாளர் 40,645 வாக்குகளை பெற்று 19.34 சதவீத வாக்குகளோடு இரண்டாம் இடம் பிடித்தார். இதனை குறிப்பிட்டு மம்தாவுக்கு இதுவரை ஆதரவு அளித்த சமூகங்கள் தங்கள் வாக்கை தற்போது இடதுசாரிகளை நோக்கி திருப்புவதாகவும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகள் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

West Bengal Politics
யாரும் படைக்காத சாதனை.. ஆனாலும் புறக்கணிக்கப்படும் தமிழக வீரர்.. வடஇந்திய ஆதிக்கம் காரணமா ?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com