நீதிமன்றத்தில் ஏஐ தொழில்நுட்பம்
நீதிமன்றத்தில் ஏஐ தொழில்நுட்பம்ChatGPT

’நீதிமன்றத்திலும் மனிதர்களுக்கு பதில் AI..’ தலைமை நீதிபதி அதிரடி முடிவு!

நீதிமன்றத்தில் சில பணிகளில் மனிதர்களுக்கு பதில் AI-ஐ களமிறக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் பின்னணியில் உள்ள முக்கியத் தகவல்களைப் பார்க்கலாம்..
Published on
Summary

இந்திய உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகச் செயல்பாடுகளில், தொழில்நுட்ப ரீதியான ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டுவர தலைமை நீதிபதி சூர்யா காந்த் (CJI Surya Kant) முடிவெடுத்துள்ளார். இனிவரும் காலங்களில், வழக்குகளைப் பட்டியலிடுதல் (Case Listing) மற்றும் அமர்வுகளைத் தீர்மானித்தல் (Bench Allocation) ஆகிய பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற உள்நாட்டு விசாரணையில், நீதிமன்றப் பதிவகத்தில் சில நிர்வாகக் குளறுபடிகள் கண்டறியப்பட்டன. நீதிமன்றப் பதிவகத்தில் சில அதிகாரிகள் நீண்ட காலம் ஒரே பதவியில் நீடிப்பது மற்றும் காலாவதியான தொழில்நுட்பக் கட்டமைப்பைப் பயன்படுத்துவது போன்றவை வழக்கு ஒதுக்கீட்டில் முறையற்ற தன்மையை ஏற்படுத்தியதாகக் கண்டறியப்பட்டது.

CJI Surya Kant
CJI Surya KantX

உதாரணமாக, உத்தரப் பிரதேச குண்டர் சட்டத்திற்கு (UP Gangsters Act) எதிரான ஒரு மனுவை விசாரித்தபோது, அதே மனு ஏற்கனவே 2022-ஆம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் (DY Chandrachud) தலைமையிலான அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது தெரியவந்தது. இருப்பினும், அந்த மனு மீண்டும் தற்செயலாக ஒரு புதிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது நிர்வாகத் தோல்வியாகக் கருதப்படுகிறது. இது குறித்து தலைமை நீதிபதி சூர்யா காந்த் கடும் அதிருப்தியைத் தெரிவித்தார்.

இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க, 'மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்' (Master of the Roster) என்று அழைக்கப்படும் தலைமை நீதிபதியின் அதிகார வரம்பிற்குள் வரும் வழக்குகளைப் பட்டியலிடும் முறையை, இனி ஏஐ (AI) மென்பொருள் தானியங்கி முறையில் மேற்கொள்ளும். இது மனிதத் தலையீட்டைக் குறைத்து, வெளிப்படைத்தன்மையையும், முறையான திட்டமிடலையும் உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்றத்தில் ஏஐ தொழில்நுட்பம்
மகளை ஏமாற்றி திருமணம்.. கும்பமேளா 'மோனலிசா' தந்தை புகார்.. ம.பி. முதல்வரிடம் கோரிக்கை!

இந்த டிஜிட்டல் மாற்றத்திற்கு, கேரளா உயர்நீத்மன்றத்தின் 'கேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' (Case Management System - CMS) ஒரு சிறந்த முன்மாதிரியாக உள்ளது. காகிதமற்ற நீதிமன்றச் செயல்பாடுகள், தானியங்கி பணிப்பாய்வு மற்றும் சாட்சி வாக்குமூலங்களை ஏஐ மூலம் ஆவணப்படுத்துதல் போன்ற சிறப்பம்சங்களைக் கொண்ட அந்த முறையை, உச்ச நீதிமன்றமும் தற்போது பின்பற்றத் திட்டமிட்டுள்ளது.

AI generated image
AI generated image AI

இது குறித்துப் பேசிய தலைமை நீதிபதி சூர்யா காந்த், "செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, மக்களுக்கு விரைவான, மலிவான மற்றும் உண்மையான நீதியை வழங்குவதற்கு உதவும். இதற்காக உச்ச நீதிமன்றத்தின் ஏஐ குழு (Supreme Court's AI Committee) தனித்துவமாகச் செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மனிதக் குறுக்கீடுகள் இன்றி, தொழில்நுட்பத்தின் உதவியுடன் வெளிப்படையான நீதி நிர்வாகத்தை முன்னெடுப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாக உள்ளது.

நீதிமன்றத்தில் ஏஐ தொழில்நுட்பம்
’தண்ணீர் கேன்களில் பெட்ரோல் விற்பனை..’ - பொதுமக்களுக்கு பெட்ரோலியத் துறை எச்சரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com