மகளை ஏமாற்றி திருமணம்.. கும்பமேளா 'மோனலிசா' தந்தை புகார்.. ம.பி. முதல்வரிடம் கோரிக்கை!
உ.பி. கும்பமேளாவின்போது புகழ்பெற்ற மோனலிசா போஸ்லே, ஃபர்மான் கான் என்ற காதலரை கேரளாவில் திருமணம் செய்துகொண்டார். அவருடைய காதலுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், ’லவ் ஜிஹாத்’என்ற பெயரில் தன் மகள் ஏமாற்றப்பட்டதாகக் கூறி, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் உதவியை, மோனலிசாவின் தந்தை நாடியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் அழகான மயக்கும் கண்கள், ஈர்க்கும் சிரிப்பு, நம்பிக்கையான பேச்சு, எளிமையான தோற்றம் என பாசிமணி விற்கும் இளம்பெண் மோனலிசா போஸ்லே ஒரேநாளில் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலானார். தவிர, அவர் பற்றிய செய்திகளும் அனைத்து சமூக ஊடகங்களிலும் வைரலாகின. அவர் இதன்மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். ஒருகட்டத்தில், அவரைப் பார்த்த பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, மோனாலிசாவை தனது அடுத்த படத்தில் நடிக்க வைப்பதாக அறிவித்தார். ’டைரீஸ் ஆஃப் மணிப்பூர்’ என்ற அந்த படத்திற்காக மோனலிசாவுக்கு ரூ.21 லட்சம் சம்பளமும் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், முகநூல் மூலம் பழக்கமான ஃபர்மான் கானும் மோனலிசாவும் காதலிக்கத் தொடங்கினர். இந்தக் காதல் விவகாரம் மோனலிசாவின் பெற்றோருக்குத் தெரிய வர, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் வேறுவேறு மதத்தைச் சேர்ந்ததால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, இந்த காதல் ஜோடி, கேரளாவுக்குத் தஞ்சமடைந்து கோயில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், பாதுகாப்பு கேட்டு கேரள போலீஸில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், மோனலிசாவை தன் தந்தையுடன் அனுப்பிவைக்க முயற்சி செயதனர். இதற்கிடையே அவர்களுடைய திருமணத்தை பலரும் 'லவ் ஜிகாத்' என்று விமர்சித்தனர். ஆனால், அந்த தம்பதி இருவரும் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் விளக்கமும் அளித்தனர்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உதவியை மோனலிசாவின் தந்தை நாடியுள்ளார். கேரளாவிலிருந்து திரும்பிய பிறகு, அவரது தந்தை ஜெயசிங் போன்ஸ்லே, ”தனது மகள் லவ் ஜிஹாத்க்கு பலியாகிவிட்டார். வலதுசாரிக் குழுக்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தி, முஸ்லிம் ஆண்கள் இந்துப் பெண்களை உறவுகளாலும் திருமணத்தாலும் கவர்ந்திழுத்து இஸ்லாத்திற்கு மாற்றுகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஃபர்மான் கான் என்ற முஸ்லிம் இளைஞரால், அவள் ஏமாற்றப்பட்டு சிக்க வைக்கப்பட்டிருக்கிறாள். இது ஒரு காதல் ஜிகாத் வழக்கு. எனது மகள் நாடு முழுவதும் நற்பெயரைப் பெற்றுள்ளார். மோனலிசாவை மத்தியப் பிரதேசத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வருவதை உறுதி செய்யுமாறு மத்தியப் பிரதேச முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கிடையே, மோனலிசாவை வீடு திரும்பச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து ஜாக்ரன் மன்ச் நிர்வாகிகள் சமீர் மஹுலே மற்றும் பூபேந்திர சவுகான் தெரிவித்துள்ளனர். மோனலிசா போஸ்லே மத்தியப் பிரதேசத்தின் மகேஷ்வர் நகரத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

