90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில் முதல் கட்டமாக 24 தொகுதிகளில் வரும் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாவது கட்ட தேர்தல் செப்டம்பர் 25 ஆம் தேதியும், இறுதிக்கட்ட தேர்தல் அக்டோபர் 1 ஆம் தேதியும் நடைபெறுகிறது. வாக்குகள் அக்டோபர் 8 ஆம் தேதி எண்ணப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஏழு தொகுதிகள் பட்டிலினத்தவருக்கும், 9 தொகுதிகள் பட்டியல் பழங்குடியினத்தவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சி தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, காங்கிரஸ் கட்சியில் இருந்த குலாம் நபி ஆசாத்தின் வெளியேற்றம்.
இந்நிலையில்தான், வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இதில், தேசிய மாநாட்டுக் கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பெரும்பாலும் ஜம்மு பகுதிகளில் வருவதாக கருத்தொன்றும் இருக்கிறது.
இந்நிலையில், 19 பேர் கொண்ட மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அண்மையில் வெளியிட்டது. இதில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. ஏனெனில் சர்ச்சைக்குறியவரான லால் சிங்கின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் 2002 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தொடர்ந்து அமைச்சராகவும் பொறுப்பேற்றார். 14 மற்றும் 15 ஆவது மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பாக உதம்பூர் தொகுதியின் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு 16 மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதன்காரணமாக, பாஜகவில் இணைந்தார். பின் 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில், பாஜக மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் கூட்டணியில் அமைந்த ஜம்மு காஷ்மீர் அரசில் அமைச்சராக இருந்தார்.
2018 ஆம் ஆண்டு ஜனவரியில் 8 வயது இஸ்லாமிய சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், சம்பவம் நிகழ்ந்து மூன்று மாதங்களுக்குப் பின், அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் மெழுகு வர்த்தி பேரணி நடத்தினார்.
அதேநாளில், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக, உள்ளூர் இந்துத்துவ தலைவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் லால் சிங் கலந்துகொண்டார். இந்த பேரணியில் லால் சிங் கலந்து கொண்டது அப்போதே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. பொதுமக்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்திய அளவில் இந்த விவகாரம் பேசுபொருளானது. இதனை அடுத்து தனது அமைச்சர் பதவியில் இருந்து லால் சிங் விலகினார். பின் சொந்தமாக கட்சியைத் தொடங்கிய அவர், மீண்டும் கடந்த மார்ச் மாதத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததே கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கதுவாவில் உள்ள பசோலி தொகுதியில் போட்டியிட உள்ளார். தேர்தல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் இவரை களமிறக்குவதாக விமர்சிக்கப்படுகிறது.
இந்துக்கள் வாழும் பகுதிகளில், அவர்களது வாக்குகளை ஒருங்கிணைக்கவும், பாஜகவிற்கு கடுமையான சவாலை ஏற்படுத்தவுமே காங்கிரஸ் இவரை களமிறக்குவதாகவும் ஒரு பார்வை உள்ளது.
ஏனெனில் சர்ச்சைக்குறிய நபராக இருந்தபோதிலும், அப்பகுதிகளில் லால் சிங் செல்வாக்கு மிக்கவராக கருதப்படுகிறார். இது ஒருபுறமிருந்தாலும், காங்கிரஸ் கட்சியிலுள்ள இஸ்லாமிய தலைவர்களே, லால் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.