‘திருமண சம்மத கடிதம் கொடுங்க..’ - ஆத்திரத்தில் காதலியின் தம்பி, தங்கையை குத்திய காதலன்; இருவர் கைது!
செய்தியாளர்: சுமன்
கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை மீனவ கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஜினு. இவர், தனது பக்கத்து வீட்டுப் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஜினு காதலித்த பெண், தனது வீட்டை விட்டு வெளியேறி ஜினு வீட்டில் அடைக்கலமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பெண் வீட்டார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இருப்பினும் ஜினு வீட்டார் தேவாலயத்தில் வைத்து திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்ததோடு பெண் வீட்டாரிடம் தேவாலயத்திற்கு கொடுப்பதற்காக திருமண சம்மத கடிதத்தை கேட்டதாக தெரிகிறது.
இதற்கு பெண் வீட்டார் சம்மத கடிதம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜினு, தனது சகோதரர் பிரவீனுடன் கடந்த திங்கள்கிழமை (நேற்று முன்தினம்) இரவு காதலியின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு காதலியின் தம்பி மற்றும் தங்கையை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து புகாரின் அடிப்படையில் ஜினு மற்றும் பிரவீன் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த குளச்சல் போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.