ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் பிரமோஸ் ஏவுகணை.. இந்தியா - வியட்நாம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து!
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்புகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்த பிரம்மோஸ் ஏவுகணை, இந்தியாவின் பாதுகாப்புத் திறனின் அடையாளமாக மட்டுமல்லாமல், சர்வதேச பாதுகாப்பு சந்தையிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை. தற்போது, உலகின் அதிவேக சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளில் ஒன்றாக வளர்ச்சியடைந்திருக்கிறது. இந்த ஏவுகணை இந்தியாவில் உள்ள பல்வேறு உற்பத்தி மையங்களில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய ராணுவத்தின் மூன்று படைப்பிரிவுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நிலம், நீர், ஆகாயம் என மூன்று நிலைகளில் இருந்தும், ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கவும் பிரமோஸ் ஏவுகணையால் முடியும். அதேபோல, பிரம்மோஸ் ஏவுகணைகள் மேக் 2.8 வேகத்தில் பயணிக்கின்றன, இது ஒலியின் வேகத்தை விட 2.8 மடங்கு அதிகம். இவ்வாறு, உலகின் அதிவேக ஏவுகணைகளில் ஒன்றாக பிரமோஸ் இருப்பதுடன் அவற்றால், 300 கிலோ வரையிலான ஆயுதங்களை சுமந்துச் செல்ல முடியும். இவ்வாறு, பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கும் இந்த ஏவுகணையை வாங்க பல்வேறு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
அதன்படி, பிலிப்பைன்ஸ் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவுடன் 2,700 கோடி மதிப்பீட்டில் கையெழுத்திட்டது. தொடர்ந்து, வியாட்நாம் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அது குறித்து இந்திய தரப்பில் இருந்தோ அல்லது வியட்நாம் தரப்பில் இருந்தோ உறுதிப்படுத்தாமல் இருந்து வந்தது. இந்தசூழலில் தான், சிங்கப்பூரில் நடந்து வரும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் இந்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் உறுதிப்படுத்தியிருக்கிறார். வியாட்நாம் பிரதிநிதி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பிரமோஸ் ஏவுகணையை வாங்க கடந்த நிதியாண்டே வியட்நாம் ஒப்பந்தம் செய்து விட்டது எனவும் இந்தோனேசியாவுடன் ஒரு ஒப்பந்தம் போடும் நிலையில் உள்ளது எனவும் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், நம்பிக்கைக்குரியவர்களுக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது என்றும் ஆசிய நாடுகளை இந்தியா ஒரு நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக பார்க்கிறது எனவும் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் தென்கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய கூட்டாளியாக இந்தியா உருவெடுத்து வருவதுடன், உலகளாவிய பாதுகாப்பு ஏற்றுமதி துறையிலும் தனது செல்வாக்கை மேலும் வலுப்படுத்தி வருவதாக அரசியல் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

