CUET தேர்வு தாமதம் | ”நாட்டின் ஒட்டுமொத்த கல்வி அமைப்பை மோடி சீரழித்து விட்டார்” - ராகுல்காந்தி
மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் அதற்கு கீழ் செயல்படும் கல்லூரிகளில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திவருகிறது. அந்தவகையில் தான், இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான CUET நுழைவுத்தேர்வு கடந்த மே 11 தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று குறிப்பிட்ட சில பாடங்களுக்கான தேர்வு இன்று பிற்பகல் 3 மணிக்கு நுழைவுத் தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இன்று மதியம் வெளியான தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பில், தொழில் நுட்பக் காரணமாக 3 மணிக்கு நடைபெறவிருந்த தேர்வு 1 மணி நேரம் தாமதமாக, அதாவது 4 மணிக்கு தொடங்கும் என தெரிவித்தது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஏற்கனவே, நீட் குளறுபடி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தேசிய தேர்வு முகமையின் இந்த அறிவிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ள விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், நீட் CBSE, SSC,CUET,NEET உள்ளிட்ட 4 தேர்வுகள் ஒரு கோடி மாணவர்கள் எழுதியுள்ள நிலையில் இவற்றில் ஒரு தேர்வு கூட நேர்மையாக நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தன்னை ஒரு விஸ்வகுருவாக பறைசாற்றிக் கொள்ளும் அதேவேளையில், இந்தியாவிற்குள் ஒரு தேர்வை கூட முறையாக நடத்த இயலாத தலைவராகவும் அவர் உள்ளார் எனவும் இந்நாட்டின் ஒட்டுமொத்த கல்வி அமைப்பையும் பிரதமர் நரேந்திர மோடி சீரழித்துக் கொண்டிருக்கிறார் எனவும் காட்டமான விமர்சனத்தை ராகுல்காந்தி முன்வைத்திருக்கிறார். தொடர்ந்து, எந்த தலைமுறையின் எதிர்காலத்தை பிரதமர் மோடி சீரழித்துக் கொண்டிருக்கிறாரோ அதே தலைமுறைதான் பிரதமரை பொறுப்பு கூற வைப்பார்கள் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

