
2025 ஆம் ஆண்டு அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் உலக நிகழ்வுகள் மூலம் இந்தியாவையும் உலகத்தையும் பாதித்த முக்கிய தருணங்களை பதிவு செய்த ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்தது. இந்த இணைப்பில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக பார்க்கலாம்.
இயற்கை பேரெழில் கொட்டிக்கிடக்கும் காஷ்மீருக்கு இந்தாண்டு சோதனையான ஆண்டாகவே அமைந்தது. கிஷ்த்வார் மேகவெடிப்பு நிகழ்வில் 68 பேர் உயிரிழந்தனர். 300 பேர் இறந்தனர். இதேபோல உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியும் மேகவெடிப்பால் சிதையுண்டது. தொலைதூர மலைப்பாங்கான பகுதிகள் மட்டுமல்ல, மாநகரமான கொல்கத்தாவும் மேகவெடிப்புக்கு இலக்கானது. 3 மணி நேரம் கொட்டிய 33 சென்டிமீட்டர் மழை, 9 உயிர்களை பறித்தது.
பஞ்சாப் மாநிலம் 40 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம் பல லட்சம் பேரை பாதித்தது. இமாச்சல பிரதேசம், உத்ராகண்ட் மாநிலங்களும் கடும் வெள்ள பாதிப்பை சந்தித்தன. நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தால் மரணித்த நிலையில் பல ஆயிரம் ஏக்கர் வயல்கள் நீர் சூழ்ந்து விவசாயிகளை வேதனையில் மூழ்க வைத்தது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸில் பற்றிய வரலாறு காணாத காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்தியது. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் இருந்த மரங்கள் கருகியதுடன் 16 ஆயிரம் கட்டடங்களும் பாதிக்கப்பட்டன. ஏராளமான வன விலங்குகள் உயிரிழந்தன. தீயை அணைக்க அமெரிக்க அரசு திணறிப்போய்விட்டது. தென் கொரியாவிலும் முன்னெப்போதும் இல்லாத அளவில் பரவிய காட்டுத்தீயில் 87 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் கருகின.
நிலநடுக்கங்களும் இந்தாண்டு பல ஆயிரம் உயிர்களை பறித்துச்சென்றது. மார்ச் மாதம் மியான்மர் நிலநடுக்கத்தில் 5 ஆயிரத்து 413 பேர் மண் மூடி மறித்தனர். சுமார் 11 ஆயிரம் பேர் காயமடைந்தனர். ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தானை நிலநடுக்கம் தாக்கியதில் 2 ஆயிரத்து 200 பேர் இறந்த நிலையில் 3,500 பேர் காயமடைந்தனர்.
எத்தியோப்பியாவில் 12 ஆயிரம் ஆண்டுகளாக உறங்கிக்கொண்டிருந்த ஹைலி குப்பி (HYLI GUBBI) எரிமலை இந்தாண்டு விழித்தெழுந்துவிட்டது. எரிமலை சாம்பல் இந்தியா, சீனா போன்ற நாடுகள் வரை பரவி விமானப்போக்குவரத்தை பாதித்தது. பிலிப்பைன்ஸ் நாட்டில் டால் என்ற எரிமலை சாம்பலை பீய்ச்சியடித்து மலைக்க வைத்தது. அமெரிக்காவின் ஹவாயில் உள்ள கிலாயூ எரிமலையும் நெருப்புக்குழம்புகளை பீய்ச்சியடித்து பிரமிக்க வைத்தது.
குளுகுளு பூமியாக அறியப்படும் ஐரோப்பா இந்தாண்டு அனலில் தகித்தது. வெப்ப அலையில் ஐரோப்பியர்கள் தவித்துப்போயினர். பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன் என அனலின் அட்டகாசத்திற்கு தப்பிக்காத நாடுகளே இல்லை. அதீத வெப்பத்தால் போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகளில் காட்டுத்தீக்களும் ஏற்பட்டன.
ரஷ்யாவின் கிழக்கு கடலோர பகுதியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் நிலநடுக்கம் பல நாடுகளையும் பதற வைத்துவிட்டது. ரஷ்யா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், தைவான், ஹவாய் ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது, கடலோர பகுதிகளில் வசித்த 20 லட்சம் பேரை அவசரமாக வெளியேற்றியது ஜப்பான். சில இடங்களில் பனை மர உயரத்திற்கு அலைகள் எழுந்தன.
இந்தாண்டு புயல்களின் ஆண்டு என சொல்லுமளவுக்கு அவற்றின் எண்ணிக்கையும் ஆக்ரோஷமும் அதிகம். அக்டோபர் மாதம் மத்திய அமெரிக்க பகுதி நாடுகளை மெலிஸா புயல் மிரள வைத்துவிட்டது. 298 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளிக்காற்று கியூபாவை பந்தாடிவிட்டது. ஜமைக்கா, கொலம்பியா கடல் பகுதிகளையும் மெலிஸாவிடமிருந்து தப்பவில்லை. மெலிசா புயல்தான் இந்தாண்டில் உலகில் ஏற்பட்ட புயல்களிலேயே மிக வலிமையானதாக அமைந்தது.
மேற்கில் ஒரே ஒரு மெலிசா புயல் மிரட்டியது என்றால் கிழக்கில் அலையலையாக வந்த புயல்கள் பல நாடுகளை மிதக்க வைத்தன. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ரகசா, ஃபெங்ஷென், கல்மேகி, ஃபங் வாங், சென்யார் ஆகிய வலிமையான புயல்கள் தென் கிழக்காசிய நாடுகளை சின்னாபின்னமாக்கிவிட்டன. தாய்லாந்து, வியட்நாம், ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா இயற்கையின் சீற்றத்தில் சீரழிந்தன. சில ஆயிரம் உயிர்கள் பறிபோன நிலையில் பல லட்சம் கோடி மதிப்புக்கு பொருளாதார இழப்புகள் ஏற்பட்டன.
உலக வரைபடத்தில் கண்ணீர் துளி வடிவில் காணப்படும் இலங்கை இந்தாண்டு நிஜமாகவே கண்ணீரில் மூழ்கியது. டிட்வா புயல் ஒட்டுமொத்த நாட்டையும் சுற்றிவளைத்து துவம்சம் செய்துவிட்டது. உயிரிழப்புகள் 600க்கு மேல் தாண்டிய நிலையில் நாட்டை புதியதாக கட்டியமைக்க வேண்டிய தேவை எழுந்துவிட்டதாக அதிபர் அனுரகுமார திசநாயக கூறுமளவுக்கு நாட்டை கூறு போட்டிருந்தது புயல். டிட்வா இலங்கைக்கு பேரிடராக மாறிவிட்டாலும் தமிழ்நாட்டுக்கு நல்ல மழைப்பொழிவை தந்து சென்றது.
2025ஆம் ஆண்டு இயற்கையின் சீற்றம் நிறைந்த ஆண்டாக அமைந்தது. எனினும் இயற்கையை சீற்றத்தை தணிக்க உலக நாடுகள் மேற்கொண்ட சில நகர்வுகளும் ஆறுதல் தருவதாக அமைந்தன.