”பெண்களிடம் வீரம் இல்லை” - பஹல்காம் தாக்குதல் குறித்து பாஜக எம்பி மோசமான கருத்து!
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணவம், பயங்கரவாதிகளின் 9 முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியது. இதனால், இருதரப்பிலும் தாக்குதல் தொடங்கியது. எனினும், இரு நாட்டு தாக்குதல் சம்பவத்தில் அமெரிக்க தலையிட்டது. இதைத் தொடர்ந்து தாக்குதல் சம்பவம் முடிவுக்கு வந்தது.
எனினும், அந்த தாக்குதல் தொடர்பாக சிலர் சர்ச்சைக்குரிய வகையில் அவ்வப்போது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில்கூட, பயங்கரவாதிகளின் முகாம்களை அழிப்பதற்கு இந்திய ராணுவத்திற்கு தலைமையேற்ற கர்னல் சோஃபியா குரேஷியை, பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தவிர், அவர் மீது நீதிமன்றமே வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதற்கிடையே, அவர் மன்னிப்பு கேட்டிருந்தார்.
இந்த நிலையில், ”பஹல்காமில் உள்ள பெண்களுக்கு வீர குணங்கள் இல்லை; அவர்களிடம் வைராக்கியம் இல்லாததால்தான் அவர்கள் பாதிக்கப்பட்டனர்” என ராஜ்யசபா எம்பி ராம் சந்தர் ஜங்ரா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
18ஆம் நூற்றாண்டின் துணிச்சலான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட மராட்டிய ராணியான அஹில்யாபாய் ஹோல்கரின் 300வது பிறந்த நாளில் விழாவில் பேசிய அவர், “சுற்றுலாப் பயணிகள் மீண்டும் போராடியிருக்க வேண்டும். அவர்கள் அக்னிவீர் பயிற்சி பெற்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பார்கள். சுற்றுலாப் பயணிகள் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருந்தால், மூன்று பயங்கரவாதிகள் 26 பேரைக் கொன்றிருக்க முடியாது. அவர்கள் நிச்சயமாக சண்டையிட்டிருக்க வேண்டும். அவர்கள் போராடியிருந்தால், உயிரிழப்புகள் குறைவாக இருந்திருக்கும்” எனத் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள், “பயங்கரவாதிகளுக்கு எதிராக பெண்கள் எவ்வாறு போராடுவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "அஹில்யாபாய் ஹோல்கர் ஒரு பெண், ராணி லட்சுமிபாயும் அப்படித்தான். அவர்கள் போராடவில்லையா? எங்கள் சகோதரிகள் தைரியமாக வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.
பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில், கணவர்களை இழந்த துக்கத்தில் இருக்கும் பெண்களை விமர்சிக்கும் வகையில் அவரது இந்தக் கருத்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ”பாஜக தலைவர்கள் இந்திய ராணுவத்தையும் தியாகிகளையும் தொடர்ந்து அவமதித்து வருகின்றனர்" எனவும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "பாஜக ஒரு கட்சி அல்ல, மாறாக பெண்களுக்கு எதிரான மனநிலையின் சதுப்பு நிலம்" எனவும் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலின்போது பயங்கரவாதிகள், ஆண்களை மதரீதியாகக் குறிவைத்து தாக்கிக் கொன்றது குறிப்பிடத்தக்கது.