"பயங்கரவாதிகளின் சகோதரி.." கர்னல் சோபியா குரேஷி பற்றி பாஜக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு!
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து பல்வேறுகட்ட ஆலோசனைக்கு பிறகு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ஆபரேஷனை தொடங்கிய இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இப்படி அதிகரித்த போர்பதற்றம் தற்போது இருநாடுகளின் ஒப்புதலோடு நிறுத்தத்திற்கு வந்துள்ளது.
இந்தநிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான அனைத்து இராணுவ நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.
கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.
இந்தநிலையில்தான், இரண்டு பெண்களில் ஒருவரான சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மோவ் அருகே உள்ள மண்பூர் நகரில் நடந்த அரசு விழா ஒன்றில் பேசிய விஜய் ஷா, "பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டே உங்களுக்கு பாடம் கற்பித்துள்ளோம்.” என்று பேசினார்.
இவரது சர்ச்சைக்குரிய பேச்சு வைரலானநிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும்வகையில், அமைச்சர் குன்வார் விஜயை பதவி நீக்க வேண்டும் என்று பிரதமருக்கு கார்கே வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவினையும் இட்டுள்ளார்.
இந்நிலையில், தனது சர்ச்சை பேச்சுக்கு பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கோரியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஷா, "நான் பேசியதை சிலர் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள். பஹல்காம் தாக்குதலால் நானும் எனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளானோம். எனது குடும்பம் இராணுவ பின்னணியைக் கொண்டுள்ளது. நான் சோகத்துடன் பேசியபோது, சில ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நான் கூறியிருந்தால் , 10 முறை மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன். மதத்தை தாண்டி நாட்டிற்கு சேவை செய்த சோபியா சகோதரியை என்னுடன் பிறந்த சகோதரியை விட அதிகமாக மதிக்கிறேன். இராணுவத்தையும் சோபியா சகோதரியையும் நான் வணங்குகிறேன்" என்று தெரிவித்தார்.