கர்னல் சோஃபியா குரேஷி பற்றி சர்ச்சைப் பேச்சு.. பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிவு!
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் கூடாரங்களை இரவோடு இரவாக அழித்தது. இதற்குப் பழிதீர்க்க எண்ணிய பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியது. எனினும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை முன்பே கணித்திருந்த இந்திய ராணுவம், அவற்றை வான் பாதுகாப்பு அழித்தொழித்து வெற்றி கண்டது. இதற்கிடையே அமெரிக்காவின் மத்தியஸ்த்திற்குப் பிறகு இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தியுள்ளன.
முன்னதாக, கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் தலைமையிலான இந்திய ராணுவம் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்திருந்தது. இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளுக்கு, இந்திய பெண்கள் மூலமே இந்த பதிலடி கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த இரண்டு பெண்களும் இணையத்தில் வைரலாகினர்.
இதில், சோஃபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர், “பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டே உங்களுக்கு பாடம் கற்பித்துள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இவரது சர்ச்சைக்குரிய பேச்சு வைரலானநிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தன. இதற்கு கண்டனம் தெரிவிக்கும்வகையில், அமைச்சர் குன்வார் விஜயை பதவி நீக்க வேண்டும் என்று பிரதமருக்கு கார்கே வலியுறுத்தியிருந்தார். இதற்கிடையே, தனது சர்ச்சை பேச்சுக்கு பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கோரியிருந்தார்.
அவர், "நான் பேசியதை சிலர் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள். நான் சோகத்துடன் பேசியபோது, சில ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நான் கூறியிருந்தால் 10 முறை மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன். மதத்தை தாண்டி நாட்டிற்கு சேவை செய்த சோபியா சகோதரியை என்னுடன் பிறந்த சகோதரியை விட அதிகமாக மதிக்கிறேன். இராணுவத்தையும் சோபியா சகோதரியையும் நான் வணங்குகிறேன்" எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், கர்னல் சோஃபியா குரேஷி குறித்து அவதூறான மற்றும் பாலியல்ரீதியான கருத்துகளைத் தெரிவித்ததற்காக, அவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், நீதிமன்றம் இன்று தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, விஜய் ஷா மீது முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில காவல்துறைத் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது.