சர்வதேச புக்கர் விருது: குறுகிய பட்டியலில் இடம்பிடிக்காமல் போன எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல்!

2023ஆம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசுக்கான 6 நூல்கள் கொண்ட குறுகிய பட்டியலில், பிரபல தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் நாவல் இடம்பெறவில்லை.
perumal murugan
perumal muruganfile image

சர்வதேச புக்கர் பரிசு

உலக அளவில் ஆங்கில இலக்கியப் புனைவுக்காக வழங்கப்படும் உயரிய விருது சர்வதேச புக்கர் பரிசு. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் புனைவுக்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் பதிப்பிக்கப்பட்ட புனைவு நூலை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்த நூலுக்கும் 2016ஆம் ஆண்டிலிருந்து புதிதாக விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் மே மாதம் இந்த விருது அறிவிக்கப்படும். இந்த மொழியாக்க விருதுக்கான பரிசுத் தொகை ஐம்பதாயிரம் பவுண்ட். புனைவை எழுதியவரும், அதை மொழிமாற்றம் செய்தவரும் அந்தப் பரிசுத் தொகையைப் பகிர்ந்துகொள்வர்.

தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகன் இடம்

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விமர்சகர்கள் கொண்ட நடுவர் குழுவை, ஆண்டுதோறும் சர்வதேச புக்கர் விருதுக்குழு அமைத்து விருதாளர்களை தேர்ந்தெடுத்து வருகிறது. இந்தக் குழுவினரால் 100க்கும் மேற்பட்ட நூல்கள் விருதுக்கு முன்மொழியப்பட்டாலும் அவற்றில் முதல்கட்டமாக 13 புத்தகங்கள் மட்டுமே நடுவர் குழுவால் மதிப்பீடு செய்யப்படும்.

பின்னர் அவற்றிலிருந்து 6 புத்தகங்கள் இறுதியாகத் தெரிவுசெய்யப்படும். இதிலிருந்து ஒரு புத்தகம் தேர்வு செய்யப்பட்டு, அந்த நாவலாசிரியருக்குப் பரிசு வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசின், 13 நூல்களைக் கொண்ட நீண்ட பட்டியலில் பிரபல தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் பெயர் இடம்பெற்றிருந்தது. கடந்த மார்ச் மாதம் தேர்வு செய்யப்பட்ட 13 நூல்களில் பெருமாள் முருகனின் பூக்குழி நாவல் தேர்வு செய்யப்பட்டிருந்தது. அவர், 2013ஆம் ஆண்டு ’பூக்குழி’ என்ற நாவலை எழுதியிருந்தார்.

இரு வேறு சாதிகளைச் சேர்ந்த குமரேசன் மற்றும் சரோஜா ஆகியோரின் வாழ்வு குறித்த நாவலே, பூக்குழி. சரோஜாவின் சாதியை குமரேசன் மறைத்த நிலையில், அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என கிராம மக்கள் பலமாகச் சந்தேகிக்கின்றனர்.

சரோஜாவின் சாதியைக் கண்டுபிடிப்பதை ஊரார் கருவாய்க் கொண்டிருப்பதாக இந்நாவல் பதிவு செய்திருக்கும். இந்த நாவலை அனிருத்தன் வாசுதேவன் என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் (Pyre) மொழிபெயர்த்திருந்தார். அதன்படி, ’Pyre’ என்ற நாவலுக்காக, இந்த பட்டியலில் பெருமாள் முருகன் இடம்பிடித்திருந்தார்.

குறுகிய பட்டியலில் 6 நூல்கள்

கடந்த மார்ச் மாதம், சர்வதேச புக்கர் பரிசின் இறுதிப்பட்டியலில் (13 நூல்கள்) இடம்பிடித்திருந்த இந்த நூல், சர்வதேச புக்கர் விருதுக்கான குறுகிய பட்டியலில் (6 நூல்கள்) இடம்பெறவில்லை. நேற்று முன்தினம் (ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி) அறிவிக்கப்பட்ட இந்தப் குறும்பட்டியலில், Still Born, Standing Heavy, Time Shelter, The Gospel According to the New World, Whale Boulder ஆகிய 6 நூல்களே இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஒரு நாவல் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சர்வதேச புக்கர் பரிசுக்காக வெற்றிபெற்றவர் மே 23ஆம் தேதி அறிவிக்கப்படுவார்.

இதில் 89 வயதான காண்டே, சர்வதேச புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட மிக வயதான நபர் என அறியப்படுகிறார். இவர் The Gospel According to the New World என்ற நாவலை எழுதியுள்ளார்.

சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியர்

சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ ஆவார். இவர், இந்தியில் எழுதிய 'ரெட் சமாதி' நாவலை, டைசி ராக்வெல் என்பவர் ’டோம்ப் ஆப் சாண்ட்’ என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். அந்த நாவலுக்குத்தான் கடந்த ஆண்டு சர்வதேச புக்கர் பரிசு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புக்கருக்கும் சர்வதேச புக்கருக்கும் உள்ள வித்தியாசம்

புக்கர் பரிசு அறக்கட்டளையால் ஆண்டுதோறும் இரண்டு இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில் ஒன்று புக்கர் பரிசு; மற்றொன்று சர்வதேச புக்கர் பரிசு. ஒரு படைப்பு முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் அந்த படைப்புக்கு புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. அதேவேளையில் அந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அதற்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.

இந்தப் பரிசுகளுக்கான நோக்கம் ‘பொது நலனுக்காக இலக்கியத்தின் கலை மற்றும் மதிப்பை மேம்படுத்துவது’ என்று புக்கர் பரிசுகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புக்கர் பரிசு ஒரு பார்வை

புக்கர் பரிசு 1969 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில், முதலில் நடுவர் குழுவினரால், ஒரு நீண்டபட்டியல் வெளியிடப்படும். அதில் சுமார் 12 படைப்புகள் இடம்பெறும். அவை, ‘தி புக்கர் டசன்’ என அழைக்கப்படும. இந்த நீண்டபட்டியல் ஆண்டுதோறும் தோராயமாக ஜூலையில் அறிவிக்கப்படும், பின்னர் அதிலிருந்து ஆறு புத்தகங்களின் குறுகிய பட்டியல் செப்டம்பரில் அறிவிக்கப்படும். அதைத் தொடர்து வெற்றியாளர் அக்டோபரில் அல்லது நவம்பரில் அறிவிக்கப்படுவார். புக்கர் பரிசு வெற்றியாளருக்கு £50,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.

புக்கர் பரிசை வென்ற எழுத்தாளர்கள்

இந்த புக்கர் பரிசை, கடந்த காலங்களில் தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் என்ற புத்தகத்தை எழுதிய அருந்ததி ராய், மிட்நைட்ஸ் சில்ட்ரன் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தி இன்ஹெரிட்டன்ஸ் ஆஃப் லாஸ் எழுதிய கிரண் தேசாய் மற்றும் ‘தி ஒயிட் டைகர் எழுதிய அரவிந்த் அடிகா போன்ற பல இந்திய வம்சாவளி எழுத்தாளர்கள் பெற்றிருந்தனர்.

கடந்த ஆண்டு இந்த விருது இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளரான சேகன் கருணாதிலகவுக்கு வழங்கப்பட்டது. ‘The Seven Moons of Maali Almeida’ என்ற நாவலுக்காக அவருக்கு இந்த புக்கர் பரிசு வழங்கப்பட்டது. இந்த நாவல், கடந்த 1990களில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரைக் கருவாகக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச புக்கர் பரிசு ஒரு பார்வை

சர்வதேச புக்கர் பரிசு 2005இல் தொடங்கி வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த இந்தப் பரிசு, பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகள் உட்பட பல படைப்புகளுக்கு வழங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில், சர்வதேச புக்கர் பரிசின் விதிகள் அதை வருடாந்திர பரிசாக மாற்றியது.

இந்த விதிகளின்படி, £50,000 பரிசுத்தொகை ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படுகிறது. இந்த சர்வதேச புக்கர் பட்டியலில்தான் எழுத்தாளர் பெருமாள் முருகனும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com