TMC கோட்டை.. EVM இயந்திரங்களில் பாஜக சின்னம் மறைப்பு.. விசாரணையில் ECI.. மீண்டும் வாக்குப்பதிவு?
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி பிரதிநிதித்துவப்படுத்தும் டைமண்ட் ஹார்பர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஃபால்டா சட்டமன்றத் தொகுதி, முக்கிய பதற்றப் புள்ளியாக உருவெடுத்துள்ளது. இந்த தொகுதியின் சில வாக்குச் சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக சின்னம் மறைக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், எஞ்சியுள்ள 142 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திரிணாமூல் காங்கிரஸின் பாரம்பரிய கோட்டையாக விளங்கும் கொல்கத்தா, ஹவுரா, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், நாடியா, ஹூக்ளி மற்றும் பூர்பா பர்தமான் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களை இந்தக் கட்டம் உள்ளடக்கியுள்ளது. வாக்குப்பதிவின்போது பல பகுதிகளில் ஆங்காங்கே வன்முறை, பதற்றம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி பிரதிநிதித்துவப்படுத்தும் டைமண்ட் ஹார்பர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஃபால்டா சட்டமன்றத் தொகுதி, முக்கிய பதற்றப் புள்ளியாக உருவெடுத்துள்ளது. இந்த தொகுதியின் சில வாக்குச் சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக சின்னம் மறைக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. பாஜக தகவல் தொழில்நுட்பத் தலைவரும், வங்காள இணைப் பொறுப்பாளருமான அமித் மால்வியா, இந்தச் சம்பவம் 144-ஆம் எண் வாக்குச்சாவடியில் இருந்து பதிவாகியுள்ளதாகவும், இதேபோல் 170 மற்றும் 189 ஆகிய வாக்குச்சாவடிகளிலும் முறைகேடு நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் பரவி வரும் காணொளிகளில், சிபிஎம் மற்றும் பாஜக வேட்பாளர்களின் பெயர்களுக்கு அருகில் நாடா ஒட்டப்பட்டிருப்பது தெரிகிறது.
இதுகுறித்து அமித் மால்வியா, ”ஃபால்டா சட்டமன்றத் தொகுதியில் உள்ள பல வாக்குச் சாவடிகளில், பாஜகவுக்கு வாக்களிக்கும் சின்னம், நாடா கொண்டு தடுக்கப்பட்டுள்ளது. இது வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவிப்பதைத் திறம்படத் தடுக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பூர்பா பர்தமானில் உள்ள மாண்டேஸ்வர் சட்டமன்றத் தொகுதியின் வாக்குச்சாவடி எண் 35-ல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தான் ஒன்று செலோ டேப்பால் மூடப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து, வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. வேட்பாளரின் புகைப்படம் இடம்பெற்றிருந்த அந்த இயந்திரத்தின் நான்காவது பொத்தானும் டேப்பால் மூடப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. டேப் ஒட்டப்பட்ட பொத்தான் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சித்திகுல்லா சௌத்ரியுடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகள் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது உறுதிசெய்யப்பட்டால், தேர்தல் ஆணையம் மறுதேர்தலுக்கு உத்தரவிடவும், பொறுப்பானவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் தயங்காது எனத் தெரிவித்துள்ளது. இத்தகைய வழக்குகள், கடுமையான தேர்தல் குற்றமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு அல்லது தலையீடு என்ற வகையின் கீழ் வரக்கூடும் என ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. முன்னதாக், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள தலைமை அலுவலர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள ஒவ்வொரு வேட்பாளரின் பொத்தானும் தெளிவாகத் தெரிவதையும், அது நாடா, பசை அல்லது வேறு எந்தப் பொருளாலும் மூடப்படாமல் இருப்பதையும் உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

