’TMC-க்கு ஓட்டு போடுங்க..’ வாக்காளர்களிடம் வலியுறுத்திய காவலர்கள்.. கடுப்பான காங்.!
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களை மாநில காவல் துறை அதிகாரிகள் வற்புறுத்தியதாகச் செய்தி வெளியாகி உள்ளது. நாடியா மாவட்டத்தின் சார் முக்தார்பூர் பகுதியில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், எஞ்சியுள்ள 142 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திரிணாமூல் காங்கிரஸின் பாரம்பரிய கோட்டையாக விளங்கும் கொல்கத்தா, ஹவுரா, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், நாடியா, ஹூக்ளி மற்றும் பூர்பா பர்தமான் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களை இந்தக் கட்டம் உள்ளடக்கியுள்ளது.
வாக்குப்பதிவின்போது பல பகுதிகளில் ஆங்காங்கே வன்முறை, பதற்றம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்தச் சம்பவங்களுக்கு மத்தியில், மதியம் 1 மணி வரை 61.1% வாக்குச் சதவிகிதம் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களை மாநில காவல் துறை அதிகாரிகள் வற்புறுத்தியதாகச் செய்தி வெளியாகி உள்ளது. நாடியா மாவட்டத்தின் சார் முக்தார்பூர் பகுதியில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. அங்கு, காவல் துறையினர் தங்களது விருப்பத்தை மாற்ற முயன்றதாக வாக்காளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாநில காவல்துறை அதிகாரிகள், திரிணாமுல் காங்கிரஸை ஆதரிக்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. தவிர கடுமையான நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளது.

