TMC கோட்டையில் உ.பி. என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்.. மம்தாவுக்கு சிக்கல்? யார் இந்த அஜய் பால் ஷர்மா?
மேற்கு வங்க மாநிலத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தின் 'சிங்கம்' என்று அழைக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரியான அஜய் பால் ஷர்மாவை, பதற்றமான தெற்கு 24 பர்கானாஸ் தொகுதியில் தேர்தல் ஆணையம் பார்வையாளராக நியமித்திருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. தவிர, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கானின் ஆதரவாளர்களை, அவர் எச்சரிக்கும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து மாநிலத் தேர்தல்களில், இன்னும் மேற்கு வங்கத்தில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு மட்டுமே எஞ்சியுள்ளது. அதுவும், நாளை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தின் 'சிங்கம்' என்று அழைக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரியான அஜய் பால் ஷர்மாவை, பதற்றமான தெற்கு 24 பர்கானாஸ் தொகுதியில் தேர்தல் ஆணையம் பார்வையாளராக நியமித்திருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. தவிர, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கானின் ஆதரவாளர்களை, அவர் எச்சரிக்கும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதலாகவும் வெடித்துள்ளது. பஞ்சாபின் லூதியானாவில் பிறந்த அஜய் சர்மா, தற்போது உ.பியின் பிரயாக்ராஜில் கூடுதல் காவல் ஆணையராக (ஏசிபி) பணியாற்றி வருகிறார்.
இவர், பணியாற்றிய இடங்களில் எல்லாம் ரொம்ப கறார் பேர்வழி என்று அறியப்படுகிறார். தவிர, அவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம் பல அபாயகரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். குறிப்பாக, இவர் டஜன் கணக்கான என்கவுன்டர்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' என அழைக்கப்படுகிறார். இந்த நிலையில்தான், முதல்வ்ர மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் ஒரு பதற்றமான பகுதியான வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸில் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு 24 பர்கானாஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும் மம்தாவின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜியின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இத்தொகுதியில் உள்ள அபிஷேக் பானர்ஜியின் நெருங்கிய உதவியாளரான ஜஹாங்கீரின் ஆதரவாளர்கள், வாக்காளர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தப் புகாரின் பேரிலேயே அஜய் பால் ஷர்மா அவ்விடத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஜஹாங்கீர் இல்லாததால், அவரது குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய அஜய் பால் ஷர்மா, ‘ஜஹாங்கீரிடம் விதிகளைப் பின்பற்றுமாறு சொல்லுங்கள், இல்லையென்றால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்’ என எச்சரித்துள்ளார். அவர் பேசும் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அதற்குப் பதிலடியாக ’மேற்கு வங்காளம் ஒன்றும் உத்தரப் பிரதேசம் அல்ல’ எனத் தக்கப் பதிலடி கொடுத்துள்ளது. மேலும், "யோகியின் விருப்பமான, துப்பாக்கியை எளிதில் பயன்படுத்தும் அந்த கவ்பாய்க்கு ஓர் எச்சரிக்கை: வரம்பு மீறி, விஷயங்களை உங்கள் கையில் எடுத்தால்... அதற்கான விலையை நீங்கள் ஜனநாயக ரீதியாக, ஆனால் மன்னிக்க முடியாத வகையில் கொடுப்பீர்கள்" எனப் பதிவிட்டுள்ளது.
ஆரம்பத்தில் பல் மருத்துவராக இருந்த அஜய் பால் ஷர்மா, அதன்பிறகே ஐபிஎஸ் அதிகாரியானார். இவருடைய சகோதரரும் மருத்துவராக இருந்து, பின்னர் பெற்றோரின் வற்புறுத்தலுக்குப் பிறகு ஐ.ஏ.எஸ். ஆனவர். 2018ஆம் ஆண்டு, அஜய் பால் ஷர்மா ராம்பூரில் பணியாற்றியபோது, ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளியைப் பிடிக்க முயன்றபோது, அவனைச் சுட்டுப் பிடித்தார். இந்தச் சம்பவமே முதன்முறையாக அவரை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் சென்றது.
அந்த ஆண்டே, முதல்வர் ஆதித்யநாத்தால் பாராட்டப்பட்ட அவர், பின்னர் எஸ்.எஸ்.பி பதவிக்கு உயர்த்தப்பட்டு நொய்டாவிற்கு மாற்றப்பட்டார். குற்றவாளிகளை மட்டுமல்ல, தனது சொந்த காவல் படையையும் கண்காணிப்பதில் பெயர் பெற்றவர். நொய்டாவில் பணியில் இருந்தபோது, காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக அவர் காதுக்கு எட்டியது. இதில் களத்தில் இறங்கிய அவர், ஒருநாள் இரவு, சாதாரண உடையில் சென்று ஓர் உதவி ஆய்வாளரைக் கையும் களவுமாகப் பிடித்து, அவரைப் பணியிடை நீக்கம் செய்தார்.

