புதிய ஆணையர் நியமனம் | தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்த தேஜஸ்வி யாதவ்!
இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இவருடைய நியமனம் தொடர்பாக மூத்த வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். ’அவசர கதியில் இரண்டாவது முறையாக தலைமை தேர்தல் ஆணையரை மத்திய அரசு நியமித்துள்ளதாகவும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் இந்த நியமனம் இருப்பதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார். அதுபோல், காங்கிரஸும் குற்றஞ்சாட்டியுள்ளது. ’உச்சநீதிமன்றத்தில் 48 மணி நேரத்தில் தேர்தல் ஆணையர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அவசரஅவசரமாக தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்’ என அது கேள்வி எழுப்பியுள்ளது.
தற்போது இந்த விவகாரத்தை பீகாரின் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவருமான தேஜஸ்வி யாதவ் கையில் எடுத்துள்ளார். இதுகுறித்து அவர், ”சாதாரண குடிமக்கள் மற்றும் வாக்காளர்களின் பார்வையில், தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளின் கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தீர்க்கத் தவறிவிட்டது. தேர்தல் ஆணையம் இனி நடுவராக இருக்கும் என்பதை மறந்துவிடுங்கள். அது, இனி பார்வையாளராகக்கூட இல்லை. அது பாஜகவின் தேர்தல் கல்லூரியாக மாறிவிட்டது. தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் ஒரு புற்றுநோயாக மாறி வருகிறது. மக்களுக்கு தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் உள்ளது” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
தேஜஸ்வி யாதவின் இந்தக் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அது, “பிரதமரின் ஆலோசனையின் பேரில் நியமனம் நேரடியாக நடைபெற்றுள்ளது. இந்தக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரைச் சேர்த்ததன் மூலம், அது முன்னெப்போதையும்விட வெளிப்படைத்தன்மையுடன் செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, புதிய சட்டத்தின் கீழ் தோ்தல் ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க திரினாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் ஒரு தலையீட்டு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார்.