rahul gandhi react on appointment of chief election commissioner
ஞானேஷ் குமார்x page

புதிய தேர்தல் ஆணையர் நியமனம் | உச்ச நீதிமன்றத்தில் முறையீடு.. ராகுல் எதிர்வினை!

தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
Published on

தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையரான ராஜீவ் குமாரின் பதவிக்காலம் இன்றுடன் (பிப்.18) நிறைவடைகிறது. இதையடுத்து, அந்தப் பதவிக்கு புதிய ஆணையரைத் தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு களமிறங்கியது. அதன்படி, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமித்து மத்திய அரசு நேற்று இரவு அறிவிப்பை வெளியிட்டது. அவரது நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். தனது முறையீட்டை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவசர கதியில் இரண்டாவது முறையாக தலைமை தேர்தல் ஆணையரை மத்திய அரசு நியமித்துள்ளதாகவும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் இந்த நியமனம் இருப்பதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

rahul gandhi react on appointment of chief election commissioner
ஞானேஷ் குமார்எக்ஸ் தளம்

நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு

முன்னதாக, ’1989 ஹரியானா பிரிவு ஐஏஎஸ் விவேக் ஜோஷி தோ்தல் ஆணையராக அறிவிக்கப்பட்டுள்ளாா். தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கி மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. அதுவரை புதிய தலைமைத் தோ்தல் ஆணையா் தோ்வை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும்’ என காங்கிரஸ் தரப்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, ’இரவோடு இரவாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று புதிய தலைமை தேர்தல் ஆணையரின் பெயரை மத்திய அரசு வெளியிட்டுள்ளது’ என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

rahul gandhi react on appointment of chief election commissioner
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பிப்.18 ஓய்வு.. அடுத்தது யார்?

நியமனம் தொடர்பாக ராகுல் காந்தி எதிர்வினை

இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் கூட்டத்தில் எனது எதிர்ப்பைப் பதிவு செய்தேன். தேர்தல் ஆணையத்தின் அடிப்படை அம்சமே, எந்த தலையீடும் இல்லாமல் சுதந்திரமான முறையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினேன்.

உச்சநீதிமன்றத்தில் 48 மணி நேரத்தில் தேர்தல் ஆணையர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அவசரஅவசரமாக தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்? உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியதன் மூலமாக நாட்டின் கோடிக்கணக்கான வாக்காளர்களின் தேர்தல் ஆணையம் குறித்த நேர்மை கேள்விக்குறியாகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அம்பேத்கர் உள்ளிட்ட தேசத் தலைவர்களின் கொள்கைகளை நிலைநிறுத்துவதும், அரசாங்கத்தை பொறுப்பேற்க வைப்பதும் எனது கடமை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், பிரதமரும், உள்துறை அமைச்சரும் நள்ளிரவில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய முடிவெடுத்தது அவமரியாதைக்குரியது, மரியாதையற்றது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, புதிய ஆணையரைத் தேர்வு செய்யும் பணியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

rahul gandhi react on appointment of chief election commissioner
சுஷில் சந்திரா நாளை மறுநாள் ஓய்வு - அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்

ஞானேஷ் குமார் நியமனம் பாஜக பதில்!

ஆனால், “தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் எந்த விதிமீறலும் இல்லை” என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அவர், “தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் விதிமீறல் இல்லாதபோதே காங்கிரஸும், ராகுலும் கதறுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியின்போது தேர்தல் ஆணையர்கள் எவ்வாறு நியமிக்கப்பட்டனர் என்பதை ராகுல் காந்தி மறுந்துவிட்டாரா? பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதிலும், தேர்வு முறையை சீர்திருத்த காங்கிரஸ் அரசு ஏன் எதுவும் செய்யவில்லை? உண்மையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் ஆணையர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை” எனத் தெரிவித்துள்ளார்.

rahul gandhi react on appointment of chief election commissioner
தர்மேந்திர பிரதான்x page

மார்ச் 2, 2023 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ’தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தை நிர்வாகத்தின் கைகளில் விட்டுவிடுவது நாட்டின் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கும் தீங்கு விளைவிக்கும்’ என தீர்ப்பளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

rahul gandhi react on appointment of chief election commissioner
"தேர்தல் ஆணையத்தைக் காணவில்லையா?" - புகாருக்கு தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com