வேறு சமூக இளைஞரை மணந்ததால் ஆத்திரம்... மகளின் கண்முன்னே மருமகனை கொன்ற நபர்! | Bihar
பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில், 25 வயதுடைய ராகுல் குமார் என்பவர், 2 ஆம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த தானு பிரியாவிற்கும் இவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இதனையடுத்து, ராகுலும், தானுவும் சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், தனது மகன் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வதை பெண்ணின் தந்தையும் அவரது குடும்பத்தினரும் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, எப்படியாவது தனது மருமகனை தீர்த்து கட்டியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார் பெண்ணின் தந்தை.
எனவே, ராகுலும் தன்னும் நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு ஒரே விடுதி கட்டிடத்தில் வெவ்வேறு தளங்களில் வசித்து வந்தனர். இந்தநிலையில், நேற்று மாலை ஹூடி அணிந்த ஒரு மர்ம நபர் ராகுலை துப்பாக்கியால் சுட்டுள்ளார். ராகுலை துப்பாக்கியால் சுட்டது பெண்ணின் தந்தை சங்கர் ஜா என்று தெரியவந்தது.
இதுகுறித்து தெரிவித்த தன்னு, “என் தந்தை என் கண்களுக்கு முன்பாகவே என் கணவரின் மார்பில் சுட்டார். என் கணவர் என் மடியில் விழுந்தார். என் முழு குடும்பமும் இந்த சதியில் ஈடுபட்டுள்ளது“ என்று தன்னு கூறினார். முன்னதாக, " நாங்கள் நீதிமன்றத்திற்குச் சென்று என் தந்தையும் என் சகோதரர்களும் என்னையோ அல்லது என் கணவரையோ காயப்படுத்தக்கூடும் என்று மனு அளித்திருந்திருந்தோம்" என்று கூறியுள்ளார்.
ராகுலை ஜா துப்பாக்கியால் சுட்டதை அறிந்த ராகுலின் நண்பர்களும் மற்ற விடுதி மாணவர்களும் ஜாவை அடித்து உதைத்துள்ளனர். தற்போது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தர்பங்கா மாவட்ட நீதிபதி கௌஷல் குமார் மற்றும் மூத்த காவல் கண்காணிப்பாளர் ஜெகநாத் ரெட்டி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க ஏராளமான போலீசார் களத்தில் உள்ளனர்.
தொடர்ந்து இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய, திரு. ரெட்டி, "ஒரு பிஎஸ்சி (நர்சிங்) மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக எங்களுக்கு முதலில் தகவல் கிடைத்தது. பின்னர், அவருக்கும் சக மாணவிக்கும் காதல் திருமணம் நடந்தது எங்களுக்குத் தெரியவந்தது. பெண்ணின் தந்தையே சுட்டுகொலை செய்துள்ளார். இதனையறிந்த ராகுலின் நண்பர்கள் ஜாவை அடித்து உதைத்துள்ளனர். அவர் இப்போது பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்மீது, வழக்குப் பதிவு செய்து தேவையான நடவடிக்கை எடுப்போம்." என்று கூறினார்.
வேறு சமூகத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்ததால், தனது மகளின் கண்முன்னே, அவரின் கணவரை தந்தையே கொலை செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.