பீகார்| துணை முதல்வருக்கு 2 Voter ID.. நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான போலி வாக்காளர்கள் தொடர்பான விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரிய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே, பீகார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான விஜய்குமார் சின்ஹாவுக்கு 2 தொகுதிகளில் வாக்காளர் அட்டை இருப்பதாக புகார் கிளம்பியது. பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், தன்னுடைய எக்ஸ் தள பதிவில், சின்ஹாவின் பெயரை அவரது சட்டமன்றத் தொகுதியான லக்கிசராய் மற்றும் பாட்னாவில் உள்ள பங்கிபூரில் வாக்காளராகக் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்திருந்தார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், ”வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கைக்கு பின்பும் சின்ஹா பெயர் நீக்கப்படவில்லை. ஆச்சரியப்படும் விதமாக, பீகாரில் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செய்யப்பட்ட பிறகு இது நடந்துள்ளது. இந்த தவறுக்கு தேர்தல் ஆணையம் பொறுப்பா அல்லது துணை முதல்வர் பொறுப்பா” எனக் கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக பேசிய விஜய்குமார் சின்ஹா, "முன்னதாக, எனது முழுக் குடும்பத்தின் பெயரும் பாட்னாவில் பட்டியலிடப்பட்டிருந்தது. ஏப்ரல் 2024இல், லக்கிசராய் சட்டமன்றத்தில் எனது பெயரைச் சேர்க்க விண்ணப்பித்தேன். எனது பெயரை அங்கிருந்து நீக்குவதற்கான படிவத்தையும் நிரப்பினேன். என்னிடம் ஆதாரம் உள்ளது. ஏதோ காரணத்தால், எனது பெயர் நீக்கப்படவில்லை. எனவே நான் BLO-வை அழைத்து எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து ரசீது எடுத்தேன். என்னிடம் இரண்டு ஆவணங்களும் உள்ளன. எனது நீக்கல் படிவம் நிராகரிக்கப்பட்டது. நான் ஒரே இடத்திலிருந்து மட்டுமே வாக்களிக்கிறேன். கடந்த முறையும், நான் லக்கிசராய் பகுதியில் இருந்து மட்டுமே வாக்களித்தேன். அரசியலமைப்பு பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவர், தனது மொழியால் அரசியலைக் களங்கப்படுத்துவது வருத்தமளிக்கிறது; இது அவருக்குப் பொருந்தாது. முழுமையான உண்மைகள் தெரிய வேண்டும். காட்டு ராஜ்ஜியத்தின் இளவரசர் மற்றவர்களை களங்கப்படுத்தும் விளையாட்டை விளையாடும் விதத்தில், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்லவே கூடாது என்பது பீகார் மற்றும் நாடு முழுவதும் தெரியும்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், விஜய்குமார் சின்ஹாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பங்கிபூர் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரி, இரண்டு வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் விஜய்குமார் சின்ஹா பெயர் பட்டியலிடப்பட்டதற்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அவர் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
முன்னதாக, வரைவு வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இல்லை என்று தேஜஷ்வி யாதவ் முன்பு குற்றம்சாட்டியிருந்தார். இருப்பினும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவரது பெயர் வேறு EPIC எண்ணுடன் பட்டியலிடப்பட்டிருப்பதைக் கண்டறிந்து, விளக்கம் அளிக்குமாறு அவரிடம் கேட்டனர். அதன்பிறகு, தேஜஸ்வி யாதவ் தன்னிடம் இருந்த 2 வாக்காளர் அட்டைகளைக் காட்டியிருந்த நிலையில் இதுதொடர்பாக அவரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது.
இதுதொடர்பாக பேசிய தேஜஸ்வி யாதவ், “முன்னதாக, பங்கிபூர் சட்டமன்றத் தொகுதியில் எனது மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. ஏப்ரல் 2024இல், லக்கிசராய் தொகுதியில் இருந்து எனது பெயரைச் சேர்க்க விண்ணப்பித்தேன். பங்கிபூரில் இருந்து எனது மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை நீக்க ஒரு படிவத்தையும் நிரப்பினேன். ஏதோ காரணத்தால், பங்கிபூரில் இருந்து எனது பெயர் நீக்கப்படவில்லை" எனப் பதிலளித்தார்.